Share via:
பிற மாநில ஆம்னி பேருந்துகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
வருகிற 12ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி ரெயில்களிலும், அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும் தங்களின் பயணத்தை மேற்கொள்ள முன்பதிவு டிக்கெட் வசதி உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகின்றனர்.
பண்டிகை காலங்களின் போது ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிப்பதாக அடிக்கடி புகார்கள் எழுவதும், அந்த ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் தீபாவளி பண்டிகையின் போது அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என ஏற்கனவே தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் வருகிற டிசம்பர் மாதம் 16ம் தேதிக்கு பின்னர் தமிழகத்தில் இயங்க அனுமதி இல்லை என்று போக்குவரத்துத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு கூடுதல் கட்டணம் வசூலித்தால் அந்த ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்வோம் என்றும் போக்குவரத்துத்துறை மற்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.