Share via:
தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான நவம்பர் 13ம் தேதியை விடுமுறை நாளென்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
வருகிற 12ம் தேதி தீபாவளி பண்டிகை வெகு கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை முன்னிட்டு மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி உள்ளனர்.
இதற்கிடையில் பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர். அதாவது ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வருவதால் அதற்கு மறுநாளான திங்கட்கிழமையை (நவ.13) விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்பதுதான். வெளியூர் செல்லும் பொது மக்கள் தங்கள் பணியிடங்களுக்கு திரும்புவதில் சிக்கல் இருப்பதாகவும், தீபாவளி பண்டிகையை முழுமையாக கொண்டாட முடியாமல் பாதியிலேயே திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதை கருத்தில் கொண்ட தமிழக அரசு தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான நவம்பர்13ம் தேதி விடுமுறையாக அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் வருகிற 18ம் தேதியன்று பணிநாளாக அறிவித்தும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.