Share via:
லதா ரஜினிகாந்துக்கு எதிரான மோசடி வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கான அனுமதியை பெங்களூர் நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு வெளியான நடிகர் ரஜினிகாந்தின் கோச்சடையான் திரைப்படத்தின் தயாரிப்புக்காக ஆட் ப்யூரோ நிறுவனத்திடம் இருந்து மீடியா ஒன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ரூ.6.2 கோடி கடனாக பெற்றது. அதற்கு நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்து கையெழுத்திட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு மீடியா ஒன் வாங்கிய கடனை திருப்பித் தரவில்லை என்று ஆட் ப்யூரோ நிறுவனம் பெங்களூரு முதன்மை நீதிமன்றத்தில் பணமோசடி வழக்கு தொடர்ந்தது. இதனால் கடன் பெற்ற முரளி, உத்தரவாத கையெழுத்திட்ட லதா ரஜினிகாந்த் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து லதா ரஜினிகாந்த் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அதன்படி இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பல்வேறு பிரிவுகளில் இருந்து 3 பிரிவுகளை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டாலும் ஆதாரங்களை திரித்து தாக்கல் செய்த பிரிவில் வழக்கை தொடரலாம் என்று முதன்மை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
இதனால் ஆட் ப்யூரோ நிறுவனம் கர்நாடக நீதிமன்றம் 3 பிரிவுகளை ரத்து செய்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடிய நிலையில், லதா ரஜினிகாந்தும் நீதிமன்ற விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இவ்விரு மனுக்களையும் உச்சநீதிமன்றம் ஏற்று விசாரணை நடத்தியதில், லதா ரஜினிகாந்தின் மேல்முறையீடு வழக்கை நிராகரித்து மோசடி வழக்கு தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த பெங்களூர் நீதிமன்றத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் பெங்களூர் நீதிமன்றம் மீண்டும் லதா ரஜினிகாந்த் மீதான விசாரணையை விரைவில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.