Share via:
நடக்கவே நடக்காது என்று பலரும் நினைத்தது நடந்தேவிட்டது. எடப்பாடி
பழனிசாமியுடன் டிடிவி தினகரன் கூட்டணி சேர்ந்துவிட்டார். இந்த திடீர் கூட்டணி திமுகவின்
தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது. அதேநேரம், பிரதமர் கூட்டத்தில் அண்ணாமலைக்கு உரிய முக்கியத்துவம்
கொடுக்கப்படாதது, ஆதரவாளர்களை கடும் கோபத்திற்குள்ளாக்கியுள்ளது.
மதுராந்தகம் மேடையில் எடப்பாடியும் தினகரனும் நேருக்கு நேர் சந்திப்பார்களா
என்ற கேள்வி எழுந்தது. மேடைக்குப் போன எடப்பாடி பழனிசாமி, நேரடியாக தினகரனை தேடிப்போய்
சந்தித்து வணக்கம் வைத்து எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
அது மட்டுமின்றி பிரதமர் பேச்சுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி,
நயினார் நாகேந்திரன், அன்புமணி, தினகரன், ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது எடப்பாடி பழனிசாமி, ‘’இரண்டு மாதம் முன்பு ஸ்டாலின் அவர்கள்,
அதிமுக கூட்டணி அமைக்கத் தடுமாறிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். தேசிய ஜனநாயக கூட்டணியிலே
இன்றைய தினம் பாமக, அமமுக இன்னும் பல கட்சிகள் எங்களோடு இணைந்திருக்கின்றன, இன்னும்
சில கட்சிகள் இணைய இருக்கின்றன.
நானும், தினகரனும் ஒன்றாக இணைந்து செயல்படப்போகிறோம். நாங்கள்
அம்மா வளர்த்த பிள்ளைகள். எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. எப்போது இணைந்தோமோ,
அப்போதே எல்லாவற்றையும் மறந்துவிட்டோம். இனி அம்மா விட்ட பணியைத் தொடர வேண்டும் என்பதுதான்
எங்களுடைய மற்றும் அவருடைய நிலைப்பாடு. ஊடக நண்பர்கள் அதற்குத் துணை நிற்க வேண்டும்…’’
என்று கேட்டுக்கொண்டார்.
நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமி மதுராந்தகம் மேடைக்கு வந்த நேரத்தில்
அண்ணாமலை ஆவேசமாகப் பேசிக்கொண்டு இருந்தார். எடப்பாடி வந்ததுமே அண்ணாமலை பேசுவதை நிறுத்தச்
சொல்லிவிட்டனர். அதோடு மேடையில் முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. பிரதமரும் அண்ணாமலை
பேரைச் சொல்லவில்லை. எனவே, அண்ணாமலை ஆதரவாளர்கள், செம அப்செட்.
