Share via:
இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பில் மாணவ, மாணவிகளின் சேர்க்கை நீட் தேர்வு முறையால் நடைபெறுவதால் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாகவும், வினாத்தாள் கசிந்ததாகவும் கூட பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. கடைசியில் முறைகேடு நடந்தது உண்மைதான் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டது நேர்மையாக நீட் தேர்வை எழுதிய தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
நீட் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் பல மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகிவிட்டது. இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தினாலும் தற்கொலை நின்றபாடில்லை.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள வித்யாதர் நகரில் பெற்றோருடன் வசித்து வந்த மாணவி யதி அகர்வால் நீட் தேர்வை எழுதியுள்ளார். 18 வயதான யதி அகர்வால், கடந்த வியாழக்கிழமை (25&ம்தேதி) தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து மகிழ்ச்சியாக தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
நள்ளிரவில் பிறந்தநாளை கொண்டாடிய மாணவி, சில மணி நேரங்களிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். இறப்பதற்கு முன்பு மாணவி எழுதி வைத்துள்ள கடிதத்தில், பெற்றோரின் எதிர்பார்ப்பை தன்னால் நிறைவேற்ற முடியவில்லை என்பதால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக உருக்கமாக எழுதியுள்ளார்.
கடந்த முறை எழுதிய நீட் தேர்வில் போதுமான மதிப்பெண் எடுக்காததால் வரவிருக்கும் தேர்வில் நல்ல மதிப்பெண்களை வாங்க யதி அகர்வால் நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. தற்கொலை எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது என்பதை பெற்றோர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள் அனைவரும் மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.