Share via:
லியோ திரைப்படத்தை வருகிற 20ம் தேதி இலங்கையில் திரையிட வேண்டாம் என்று இலங்கை தமிழ் எம்.பி.க்கள் நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் நாளை (அக்.19) உலகளவில் திரையிடப்படும் படம் ‘லியோ’. இத்திரைப்படம் சிறப்புக் காட்சிகள் தொடங்கி முதல் காட்சி வரை தமிழகத்தில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. இதெல்லாம் போதாதென்று இலங்கை தமிழ் எம்.பி.க்கள் ஒரு கடிதம் மூலம் நடிகர் விஜய்க்கு மற்றொரு அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.
லியோ திரைப்படம் வருகிற 19ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் நிலையில் இலங்கையிலும் வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இலங்கையில் விஜய் ரசிகர்கள் அதிகமுள்ள நிலையில் லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இலங்கையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணன் ராஜா நாட்டை விட்டு வெளியேறினார். இதனால் நீதி கேட்டு இலங்கையின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக வருகிற 20ம் தேதி வடக்கு கிழக்கிலும் போராட்டம் நடைபெற உள்ளது.
லியோ திரைப்படம் நாளை வெளியாகும்போது அதற்கு அடுத்த நாளான 20ம் தேதியும் ரசிகர்களை ஈர்த்துக் கொண்டால் தங்களின் போராட்டத்திற்கு பின்னடைவாக அது அமைந்துவிடும் என்று கருதுகிறார்கள் இலங்கை தமிழ் எம்.பி.க்கள். மேலும் நடிகர் விஜய்க்கும், ஈழத்தமிழர்களுக்குமான நெருங்கிய தொடர்பை சுட்டிக்காட்டிய இலங்கை தமிழ் எம்.பி.க்கள் வருகிற 20ம் தேதி மட்டும் இலங்கையில் லியோ திரைப்படத்தை நிறுத்தி வைக்க வேண்டுகிறோம் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இப்படி திரும்பும் திசையெல்லாம் ‘லியோ’ திரைப்படம் அடி வாங்கி வருவது விஜய் ரசிகர்களை கலக்கமடைய செய்துள்ளது.