Share via:
பாட்டாளி மக்கள் கட்சிக்குள் சொத்துக்களை கைப்பற்றுவதற்கு டாக்டர்
ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையில் வெட்டுக்குத்து அளவுக்கு ரகளை நடந்துவருகிறது.
அம்மாவை கொல்லப் பார்த்தான் அன்புமணி என்று ராமதாஸ் வெளிப்படையாகவே புகார் வைத்தார்.
இந்த நிலையில் இந்த பாச மலர்களை சேர்த்து வைப்பதற்கு யாகம் நடத்தியிருக்கிறார்கள் பாட்டாளி
மக்கள் கட்சியினர்.
ராமதாஸையும் அன்புமணியையும் சேர்த்து வைப்பதற்கு ஆடிட்டர் குருமூர்த்தி,
சைதை துரைசாமி ஆகியோர் ராமதாஸைச் சந்தித்துப் பேசினார்கள். இதையடுத்து ராமதாஸும் கொஞ்சம்
இறங்கி வந்திருக்கிறார். இந்த நிலையில், இந்தச் சூழலில் பா.ம.க-வின் தஞ்சாவூர் வடக்கு
மாவட்டச் செயலாளரும், ஆடுதுறை பேரூராட்சி சேர்மன் ஸ்டாலின் நவக்கிரக்கோயில்களில் ஒன்றான
கும்பகோணம் சூரியனார்கோவில் கிராமத்திலுள்ள, சிவசூரியபெருமான் கோவிலில் ராமதாஸும்
– அன்புமணியும் இணைவதற்கும், ஒற்றுமையுடன் இருப்பதற்கும் மங்கள ஆதித்ய மகா யாகம் நடத்தியிருக்கிறார்.
ஸ்டாலின் தலைமையில் கட்சியினர் யாக பூஜையில் அமர்ந்து பூஜை செய்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகை பொருட்களைக் கொண்டு இந்தச் சிறப்புப் பூஜை செய்யப்பட்டது.
கோவிலில் மங்கள வாத்தியங்கள் முழங்க, பிரகாரத்தில் வலம் வந்து மூலவர் சிவசூரியபெருமான்
உள்ளிட்ட நவக்கிரகங்களுக்குக் கலசங்களிலிருந்த புனித நீரில் சிறப்பு அபிஷேகம் செய்து
மகா ஆரத்தி செய்யப்பட்டது.
இந்த வழிபாடு செய்தால் பிரிந்தவர்கள் சேர்ந்து சண்டை சச்சரவு நீங்கி
ஒற்றுமையுடன் இருப்பார்கள் என்பது ஐதீகம் என்கிறார்கள். இது குறித்து ஸ்டாலின்,
“ஆதித்ய ஹோமம் என்பது சவால்களை வெல்லலாம் மற்றும் சூரிய கடவுளின் கதிரியக்கச்
சக்திகளால் வழிநடத்தப்பட்டு ஆன்மீக விடுதலை நிலையை அடையலாம் என்பது ஐதீகம். இதனால்,
ராமதாஸ், அன்புமணி இருவருக்கும் இடையே சுமுக நிலை ஏற்படவும், தமிழகத்தில் பா.ம.க வலுப்பெற்று
தேர்தலில் வெற்றியடைய வேண்டியும் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இது மிகப்பெரிய மாற்றத்தைத்
தரும்” என்றார்.
கட்சிப் பதவிக்கும் பணம் சம்பாதிக்கவும் டிசைன் டிசைனா தலைமையை
கணக்குப் பண்றாங்களே.