Share via:
தங்கத்தை போல் தக்காளியின் விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தக்காளி, வெங்காயம் இல்லாமல் சமைக்கவே முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. மழை காலங்களில் தக்காளி விலை தாறுமாறாக உயர்வது வாடிக்கையாகிவிட்டது.
விளைச்சல் பாதிக்கப்படுவதால் இந்த விலை வீழ்ச்சி என்றாலும் இல்லத்தரசிகள் மற்றும் உணவகம் நடத்தி வருபவர்களின் நிலை திண்டாட்டமாகிவிடுகிறது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் அந்தந்த மாநிலங்களில் நியாயவிலைக் கடைகளில் தக்காளியை பொதுமக்கள் வரிசையில் நின்று வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில் தக்காளி விலை குறித்து மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் நிதிகாரே கூறும்போது, ‘‘கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் பருவமழை காரணமாகவும், பயிர்கள் சேதம் மற்றும் பூச்சி தாக்குதல் காரணமாகவும் தென் மாநிலங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. விளைச்சல் குறைந்துள்ளதால் விநியோகமும் குறைந்து விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. தக்காளி வரத்து குறைந்ததால் வட மாநிலங்களிலும் தக்காளியின் விலை அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாயை தாண்டிவிட்டது.
மராட்டிய மாநிலத்தில் இருந்து விநியோகிக்கப்பட்டு வரும் தக்காளியின் அளவு விரைவில் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விளைச்சல் அதிகரிக்கும்பட்சத்தில் தக்காளியின் விலை கூடிய விரைவில் குறையும் என்று நிதிகாரே நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.