Share via:
சென்னையில் 2வது நாளாக எடை குறைந்த ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக பால் முகவர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி குற்றம்சாட்டை முன்வைத்துள்ளார்.
தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் ஆவின் பாலை அதிகளவில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். தனியார் பாலை விட ஆவின் பால் தரமாகவும், விலை குறைவாகவும் இருப்பதால் பொதுமக்களின் தேர்வு ஆவின் என்றே சொல்ல வேண்டும். ஆனால் சமீப காலமாக ஆவின் பொருட்கள் குறைந்தளவு விற்பனை செய்யப்பட்டு வருவது பால் முகவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் எடையளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன்படி கடந்த 9ம் தேதி வடசென்னை பகுதிகளில் உள்ள பால் முகவர்களுக்கு ஆவின் டிலைட் பால் பாக்கெட்டுகள் 100 கிராம் எடை குறைவாக அதாவது 415 கிராம் அளவுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக நேற்று (அக்.10) அதிகாலை மத்திய சென்னை பகுதியில் வினியோகிக்கப்பட்ட ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் 135 கிராம் அளவுக்கு எடை குறைவாக அதாவது 385 கிராம் எடையில் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியான பால் முகவர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு குரல் கொடுத்து வருகின்றனர்.
பால் பாக்கெட்டுகளை யார் எடை போட்டு பார்க்கப் போகிறார்கள் என்ற குருட்டு தைரியத்தில் இதுபோன்ற மோசடியை செய்தது யார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதேபோல் எடை விவகாரத்தில் இப்படிப்பட்ட மெத்தனப் போக்கு என்றால், பாலின் தரம் எப்படி இருக்கும் என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இது குறித்து தமிழ்நாடு பால்முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தகுந்த ஆதாரங்களுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது பொதுமக்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.