Share via:
கிண்டி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி திடீரென்று உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிண்டியில் செயல்பட்டு வரும் கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு கடந்த 13ம் தேதி விக்னேஷ் என்ற 26 வயது இளைஞர், டாக்டர் பாலாஜி ஜெகன்நாதனை கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறியது. உடல் நலம் தேறிய மருத்துவர் தற்போது இயல்புநிலைக்கு திரும்பியுள்ள நிலையில் விக்னேஷ் 15 நாள் நீதிமன்ற காவலில் உள்ளார்.
டாக்டர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவசரசிகிச்சை தவிர்த்து ஏனைய சிகிச்சைகள் அளிக்கமாட்டோம் என்று போராட்டத்தின் போது தெரிவித்தனர். மேலும் மெட்டல் டிடெக்டர் சோதனையும், உரிமத்துடன் கூடிய துப்பாக்கியும் தேவை என்று கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் மருத்துவர்கள் பணிக்கு செல்லாத நிலையில் சென்னை பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 31 வயதான விக்னேஷ் என்ற இளைஞர் வயிற்று வலி காரணமாக நேற்று (நவம்பர் 14) கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பித்தப்பை கல் பிரச்சினை இருப்பது தெரியவந்தது. இதனால் அவசரசிகிச்சைப் பிரிவில் விக்னேஷ் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று (நவம்பர் 15) அதிகாலை திடீரென உயிரிழந்தார்.
விக்னேஷின் உயிரிழப்புக்குக் காரணம் மருத்துவர்கள் இல்லாமைதான் என்று அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கொந்தளித்துவிட்டனர். குடல் நோய் வார்டில் அனுமதிக்கப்பட்ட விக்னேஷ் அவசர பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. அவருக்கு சரியான முறையில் தான் அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டது. இருப்பினும் அவர் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.