Share via:
கட்சியில் இருந்து விலகி நிற்கும் முக்குலத்தோர்களை இணைக்க வேண்டும்
என்று செங்கோட்டையன் எழுப்பிய விவகாரத்தை சரிக்கட்டுவதற்காக இபிஎஸ் எழுச்சிப்பயணத்தில்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும், மதுரை விமானநிலையத்துக்கு
தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இந்த விவகாரம் இப்போது பட்டியலின தலைவர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை
சம்பாதித்துள்ளது. இதுகுறித்து டாக்டர் கிருஷ்ணசாமி, ‘’மதுரை விமான நிலையம் – சின்ன
உடைப்பு என்ற முழுக்க முழுக்க தேவேந்திர குல வேளாளர்கள் வாழ்ந்துவரும் கிராம மக்களின்
நிலங்களிலேயே அமைந்துள்ளது.
விமான நிலையம் தொடங்கப்பட்டபோதும், விரிவாக்கம் செய்யப்பட்டபோதும்
தேவேந்திர குல வேளாளர்களின் நிலங்கள் மிகக் குறைந்த விலைக்கே ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளன.
பலர் தானமாகவும் நிலங்களை வழங்கியுள்ளனர். எனவே, தமிழ் மண்ணிற்காக தன்னுயிரைத் தியாகம்
செய்த ”தியாகி இமானுவேல் சேகரனார்” அவர்களின் பெயரை ”மதுரை விமான நிலையத்திற்கு” சூட்டுவதே
சாலப் பொருத்தமானதாகும்.
எனவே எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சு அவசியமற்றது. தேர்தல்
நேரத்தில் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள ஓட்டை உடைசல்களைச் சரி செய்வதை விட்டுவிட்டு,
வேறொன்றில் கால் வைக்க முயன்றால், எடப்பாடி அவர்களின் அரசியல் வாழ்விற்கு “உள்ளதும்
போச்சடா லொள்ளக் கண்ணா” என்ற சூழ்நிலை ஏற்பட்டு விடும்.’’ என்று டாக்டர் கிருஷ்ணசாமி
எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோன்று ஜான் பாண்டியன், ‘’மதுரை விமான நிலையத்திற்கு பெயர்
வைப்பது பற்றி பேசினால் இரு சமூகத்தில் உள்ள நல்ல உறவுகளை முறியடிக்கும் நோக்கத்தோடு
பேசுவது ஆரோக்கியமற்றது. எனவே, மதுரை விமான நிலையத்திற்கு நிலம் தந்த “சின்ன உடைப்பு
கிராம மக்கள்” இம்மண்ணின் பூர்வக்குடி மக்களான “தேவேந்திர குல வேளாளர்”
மக்கள் அப்பகுதியில் வாழுகின்ற அவர்களின் நீண்ட நெடுநாள் கோரிக்கையும் மதுரை விமான
நிலையத்திற்கு தியாகி இமானுவேல் சேகரனார்’ அவர்களின் பெயர் சூட்டப்பட வேண்டும்” என்பது
தான்.
எடப்பாடி பழனிசாமி அவர்களே, ஒருவரின் சொந்த நிலத்தை அரசின் பயன்பாட்டிற்கு
வழங்குபோது, அவரின் விருப்படி பெயர் வைக்கலாம், ஆனால் ஒரு கிராமம் & ஒரே சமூகமாக
இருந்தால் அந்த சமூக மக்கள் விரும்பும் பெயர்கள் சுட்டுவது தான் இன்றுவரை நடைமுறையில்
உள்ளது. ஒடுக்குமுறைக்கு எதிராக போராடியவரும், தீண்டாமை ஒழிப்புக்காக முனைப்போடு பாடுபட்டவரும்,
சுதந்திரப் போராட்ட வீரருமான தியாகி.வே.இமானுவேல் சேகரன் அவர்களின் பெயரை மதுரை விமான
நிலையத்திற்கு சூட்டுவதே பொருத்தமானது.’’ என்று குரல் எழுப்பியிருக்கிறார்.
பஞ்சாயத்தைக் கூட்டிட்டாங்களே.