Share via:
பெங்களூர் லுலு மாலில் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த முதியவரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டநெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் அத்துமீறும் சில்மிஷக்காரர்கள் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்தவகையில் இன்ஸ்டாகிராமில் ஒருவர் பதிவிட்ட வீடியோ தற்போது பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோ குறித்து அந்த பயனர் கூறும்போது, ‘‘கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள லுலு மாலில் இருந்த பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் முதியவர் ஒருவர் இதுபோன்ற தகாத செயலில் ஈடுபட்டதை பார்த்த நான், அவர் மீது சந்தேகம் கொண்டேன். பின்னர் இது குறித்து வீடியோவாக பதிவு செய்ய அவரை பின் தொடர்ந்த போது, அவர் இளம்பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். உடனே இது குறித்து நான் மால் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிடம் கூறியபோது அவர்கள் தேடி பார்த்தனர். ஆனால் அந்த முதியவர் அங்கிருந்து தப்பித்துவிட்டார்’’ என்று அந்த வீடியோவின் கேப்ஷனில் பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அந்த முதியவர் மீது ஐ.பி.சி.354 பிரிவின் கீழ் மாகடி சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவான முதியவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பெண்கள் மத்தியில் எச்சரிக்கை உணர்வை அதிகப்படுத்தியுள்ளது.