Share via:
டீப்ஃபேக் வீடியோவில் நடிகைகள் ராஷ்மிகா, கத்ரீனா கைப் சிக்கிய நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல நடிகை சிக்கியிருப்பது பெரும் சட்டசிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ராஷ்மிகா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களை தாண்டி தற்போது பாலிவுட்டில் கால்பதித்து வெற்றி நாயகியாக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் ராஷ்மிகாவின் டீப்ஃபேக் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திரையுலகத்தினர், ரசிகர்கள் டீப்ஃபேக் வீடியோவை தயார் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரல் எழுப்பினர்.
அதைத்தொடர்ந்து மத்திய அரசு போலி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டால் அவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் என்று அதிரடியாக தெரிவித்தது. இந்த அதிர்வலைகள் ஓய்வதற்குள் நடிகை கத்ரீனா கைப் ‘டைகர்3’ திரைப்படத்தில் நடித்திருந்த ஒரு காட்சியை மார்ஃபிங் செய்து அதிர்ச்சியை கிளப்பியது. டவல் அணிந்தபடி சக நடிகையுடன் சண்டை போடுவது போல் காத்ரீனா நடித்திருந்த புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பரப்பியது யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகையான கஜோலின் டீப்ஃபேக் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பெண் ஒருவர் கேமரா முன்பு ஆடை மாற்றும் வீடியோவில் நடிகை கஜோலின் முகத்தை சேர்த்து டீப்ஃபேக் வீடியோ தயாரித்தது தெரியவந்துள்ளது. ‘என்னுடன் தயாராகுங்கள்’ என்ற தலைப்புடன் வெளியான டிக்டாக் வீடியோ இது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நடிகர் அஜய்தேவ்கன்னை திருமணம் செய்து கொண்ட கஜோல், குடும்பம் குழந்தைகள் என்று நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது இதுபோன்ற வீடியோ வெளியானது அதிர்ச்சி அளிப்பதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் 19 வயதான பீகாரை சேர்ந்த இளைஞர் போலீசாரின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், அவரே முதல் நபராக ராஷ்மிகாவின் வீடியோவை வெளியிட்டார் என்று தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

