Share via:

ஜப்பானிலிருந்து எப்போதும் வித்தியாசமான கண்டுபிடிப்புகள் வருவது வழக்கம். ஏ.ஐ தொழில்நுட்பத்தையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை.
ஏ.ஐ உதவியுடன் செயல்படும் மனிதர்களுக்கான வாஷிங் மிஷினை கண்டுபிடித்துள்ளனர். எளிமையாக சொல்லவேண்டுமென்றால் நம்மை குளிப்பாட்டிவிடும் கருவி. காலையில் எழுந்து குளிக்க இந்த கருவியில் அமர்ந்தால் போதும் 15 நிமிடங்களில் குளிக்கவைத்து சுத்தப்படுத்திவிடும் .
ஸ்பாவில் இருப்பது போன்ற அனுபவத்தைக்கொடுப்பதோடு, அதன் நவீன நீர் பாய்ச்சும் திறன், நுண்ணிய காற்று குமிழ்கள் கொண்டு பளபளவென சுத்தப்படுத்திவிடும்.
இதை தொடர்ந்து AI அமைப்பு பயனரின் தோல் வகை மற்றும் உடல் அளவீடுகளின் அடிப்படையில் எப்படி குளிப்பது சிறந்தது எனக் கண்டறிந்து அதற்கேற்ற குளியலை அமைத்துக்கொடுக்கும்.
இதை தொடர்ந்து குளிப்பதற்காக மிஷன் கண்டுபிடிக்கப்படுவது இது முதன்முறை அல்ல. 1970 ஒசாகா எக்ஸ்போவில் குளிப்பதற்கான மிஷன் Sanyo Electric Co. என்ற நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது மெக்கானிக்கலாக இயங்கும். இதை முன்மாதிரியாகக் கொண்டே தற்போதைய நவீன மிஷினும் உருவாக்கப்பட்டுள்ளது.
பழைய இயந்திரம் ஜப்பானின் கண்டுபிடிப்புகளுக்கான ஆர்வத்தை வெளிப்படுத்தியது. ஆனால் புதிய இயந்திரம் பயனர்களுக்கு அதைவிட சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கும் என நம்புகின்றனர்.
ஒசாகா எக்ஸ்போ 2025-ல் இந்த குளியல் இயந்திரம் காட்சிப்படுத்தப்படவுள்ளது. சுமார் 1,000 பேர் இதை முயற்சி செய்து அனுபவத்தைப் பகிர்வார்கள் என்கின்றனர்.
இதை பயன்படுத்தும் போது உள்ளேயே இருக்கும் ஸ்கிரீனில் ரிலாக்ஸிங்கான வீடியோக்களை பார்க்கலாம்.
மனிதர்கள் தனிப்பட்ட சுகாதாரத்தை பேணுவதற்கும், ரிலாக்ஸாவதற்கு சிறந்த ஆப்ஷனாக இது இருக்கும் என்றும் விரைவில் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறுகின்றனர்.
இந்த நிறுவனம் ஏற்கெனவே மிஷினுக்கான முன்பதிவுகளைப் பெறத்தொடங்கிவிட்டதாக கூறி மகிழ்கின்றார் சேர்மென் யாசுகி அயோமா .