Share via:
எந்த பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை கடந்து சென்றுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் முன்கூட்டியே வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமுதல் அதிகமழை கொட்டித் தீர்த்தது.
நேற்று (அக்.16) கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விட்டிருந்த நிலையில், மழை பெய்யவில்லை. காலையில் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தாலும், மதிய வேளைக்கு பிறகு ஒரு சொட்டு கூட மழை பெய்யவில்லை. அதைத்தொடர்ந்து ஏற்கனவே இன்று (அக்.17) விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட்டும் வாபஸ் பெறப்பட்டது.
பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அச்சத்தை ஏற்படுத்தியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் கடந்து சென்றது. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டு வருகின்றனர்.
இருப்பினும் வெப்பசலனம் காரணமாக இன்று மாலை தொடங்கி நாளை காலை வரை மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.