Share via:
காஸாவில் இயங்கி வரும் மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி தொடங்கி இன்று வரை நடந்து வருகிறது. காஸாவில் உள்ள மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்த நிலையில் 10 லட்சத்திற்கும் அதிமாக மக்கள் காசாவை விட்டு வெளியேறியதாக ஐ.நா. அறிவித்துள்ளது.
இதற்கிடையில் இஸ்ரேல் பணையக் கைதிகளை கொலை செய்வோம் என்று ஹமாஸ் அமைப்பினர் மிரட்டல் விடுத்ததையும் தாண்டி குழந்தைகளின் தலையை துண்டித்ததாகவும் ஒரு தகவல் வெளியானது.
இந்நிலையில் இன்று அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. காஸாவில் ஏவுகணை தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் இஸ்ரேல் ராணுவம், அங்குள்ள அல் அஹ்லி மருத்துவமனையிலும் ராணுவத் தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது மருத்துவமனையில் இருந்த 500 பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவலை ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
அதேபோல் காஸா மருத்துவமனையில் காயமடைந்தவர்கள் தற்போது மற்ற மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சர்வதேச போர் சட்டங்களை இஸ்ரேல் ராணுவம் மீறியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள ஹமாஸ் அமைப்பு, காஸாவில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளுது.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பினர் கூறுவது போல் எந்த மருத்துவமனை மீதும் தாக்குதல் நடத்தவில்லை என்றும், ஹமாஸ் அமைப்பினர் நடத்திய ராக்கெட்தான் தவறுதலாக மருத்துவமனை மீது விழுந்துள்ளது என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை உறுதி செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இப்படி மாறி மாறி இஸ்ரேல் ராணுவமும், காஸா அமைப்பினரும் பழிபோட்டுக் கொண்டிருக்கும் சம்பவம் சர்வதேச நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

