Share via:
தமிழ்நாட்டிற்கு நாளை ஆரஞ்சு அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள் ஆகியவற்றில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஆங்காங்கே மழை கொட்டி வருகிறது. அத்துடன் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும் கனமழை பெய்து வருவதால் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 5 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் இருந்து 7 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
இந்நிலையில் நாளை (நவ.4) தமிழ்நாடு, கேரளா, மாஹே மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கையையும் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.