Share via:
நடிகர் விஜய்க்கு வருமானவரித்துறை ரூ.1.50 கோடி அபராதம் விதித்துள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கடந்த 2015ம் ஆண்டு நடிகர் விஜய், சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் புலி. இத்திரைப்படத்திற்காக நடிகர் விஜய்க்கு ரூ.15 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும், அதை நடிகர் விஜய் மறைத்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2016- 2017ம் நிதியாண்டிற்கான வருமானவரி கணக்கை நடிகர் விஜய்தாக்கல் செய்தார். அப்போது அந்த ஆண்டிற்கான வருமானமாக அவர் ரூ.35கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 பெற்றதாக தெரிவித்திருந்தார். அந்த மதிப்பீட்டை வருமானவரித்துறை கடந்த 2015ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் வைத்து ஒப்பிட்டு பார்த்தது.
அப்போது நடிகர் விஜய் ‘புலி’ திரைப்படத்திற்காக பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தில் கணக்கில் காட்டப்படாமல் மறைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இந்த வருமானத்தை மறைத்ததற்காக ரூ.1.50 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று வருமானவரித்துறை கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், அபராதம் 2019ம் ஆண்டிலேயே விதிக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே காலதாமதமாக பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வருமானவரித்துறை உத்தரவுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்ததோடு மனுவுக்கு வருமானவரித்துறை தகுந்த பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இவ்வழக்கு தொடர்பாக நேற்று வருமானவரித்துறை சார்பில் பதில் மனுதாக்கல் செய்த நிலையில், நடிகர் விஜய் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இந்நிலையில் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘‘ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவை நீட்டித்து வழக்கை வருகிற 30ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
லியோ திரைப்படம் ஆடியோ லாஞ்ச், டிரெய்லர் சர்ச்சை, தணிக்கை என பல பிரச்சினைகளை சந்தித்து வரும் நடிகர் விஜய்க்கு இந்த வருமானவரித்துறை உத்தரவும் பெரிய தலைவலியை கொடுத்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் துவண்டு போயுள்ளனர்.