Share via:
சாதிப் பெயரை வைத்து காதலன் திட்டியதால் வேதனையடைந்த கல்லூரி மாணவி விஷ போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கள்ளக்குறச்சி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள பல்கலைக்கழக சமுதாய கல்லூரியில் ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி 3ம் ஆண்டு படித்து வந்தவர் நந்திதா. 19 வயதான இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூரைச் சேர்ந்தவர். புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டையில் உள்ள மகளிர் தங்கும் விடுதியில் தங்கியிருந்து நந்திதா கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் நந்திதா தனது விடுதியில் மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த சகதோழிகள் அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நந்திதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த லாஸ்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் உயிரிழந்த நந்திதா, கரசானூரைச் சேர்ந்த ராஜேஷ் என்ற வாலிபருடன் பழகி வந்ததாகவும், இதற்கு நந்திதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் நந்திதா, ராஜேசுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ், நந்திதாவை அவருடைய சாதி பெயரை வைத்து சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் வேதனையடைந்த நந்திதா, தான் படிக்கும் கல்லூரியின் ஆய்வகத்தில் இருந்த மருந்தை பயன்படுத்தி விஷ ஊசியாக தனக்கு தானே போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இதனை ஊர்ஜிதம் செய்யும் வகையில் மாணவி நந்திதா தங்கியிருந்த விடுதி அறையை சோதனை செய்த போலீசாருக்கு ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அதில் காதலன் ராஜேஷ் திட்டியதால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று நந்திதா எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து நந்திதாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான ராஜேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த அக்டோபர் 2ம் தேதி நெல்லையைச் சேர்ந்த 18 வயதான சந்தியா என்ற இளம்பெண் காதலை ஏற்க மறுத்த 17 வயது சிறுவனால் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலையிலும் பள்ளர், நாடார் சமூகம் என்ற சாதிப்பெயர்கள் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.

