Share via:
திருவாரூர் மாவட்டத்தில் பட்டாசு விற்பனைக் கடைகளில் திடீரென்று வெடித்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வருகிற நவம்பர் மாதம் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பட்டாசு விற்பனை களைகட்டியுள்ளது.
அதன் ஒருபகுதியாக திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் உள்ள பட்டாசு விற்பனைக்கடை ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென்று வெடித்தது. பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்துச் சிதறுவதை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். வெடிவிபத்து ஏற்பட்ட கடை அமைந்துள்ள குடவாசல் சாலையில் அருகருகே 50க்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனைக் கடைகள் அமைந்துள்ளதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பட்டாசுக் கடையில் விபத்து எப்படி ஏற்பட்டது? மின்கசிவா அல்லது யாரேனும் செய்த நாசவேலையா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.