Share via:
சென்னையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் மீது மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தியது சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தியாகராய நகரில் இயங்கி வரும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகம் மீது நேற்று (அக்.27) இரவு 9 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் பாட்டில், கற்கள் உள்ளிட்ட பொருட்களைவீசி தாக்குதல் நடத்தினர். அந்த வேளையில் கட்சி அலுவலகத்திற்குள் யாரும் இல்லை என்பதால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.
தாக்குதல் சம்பவம் குறித்து மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாக்குதல் சம்பவம் குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தாக்குதல் நடந்த சமயத்தில் அலுவலகத்தில் யாரும் இல்லை என்பதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும், மேலும் 24 மணி நேரமும் தொடர் பாதுகாப்பு அளித்து, இங்கே இருக்கும் கம்யூனிஸ்டு கட்சியினர் பாதுகாப்பை போலீசார் உறுதி செய்ய வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.