Share via:
ஸ்மார்ட் போன் வாங்க பணம் தர மறுத்த தாயை, சொந்த மகனே கொலை செய்த சம்பவம் மராட்டிய மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த கமலாபாய் என்ற 47 வயது பெண்மணிக்கு திருமணமாகாத ராம்நாத்குலாப்ராவ் பத்வைக், தீபக் பத்வைக் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
கமலாபாய் தன்னுடைய மூத்த மகனான ராம்நாத் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது தாய்க்கு திடீரென்று உடல்நிலை சரியில்லை என்று ராம்நாத் தனது தம்பியான தீபக்கிற்கு போன் செய்துள்ளார். அவர் சென்று பார்ப்பதற்குள் தாய் கமலாபாய் உயிரிழந்ததால் தீபக்கிற்கு சந்தேகம் எழுந்தது.
மேலும் கமலாபாயின் கழுத்தில் காயங்கள் இருந்ததால் தீபக் போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், ‘‘கொலை செய்யப்பட்ட கமலாபாயின் மூத்த மகனான ராம்நாத் தனக்கு செல்போன் வேண்டும் என்று தாயிடம் கேட்டுள்ளார். அதற்கு கமலாபாய் மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதற்கான அனைத்து தகவல்களும் கமலாபாயின் பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து ராம்நாத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஸ்மார்ட் போன் வாங்கித் தராத ஆத்திரத்தில் தாயை சொந்த மகனே கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

