Share via:
தேர்தல் பிரசாரத்தின் போது எம்.பி.யை மர்ம நபர் கத்தியால் குத்தி காயப்படுத்திய சம்பவம் தெலுங்கானா அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா சட்டசபை தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 30ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் சந்திரசேகர்ராவ் ஆட்சி செய்து வரும் நிலையில் 3வது முறையாக தானே முதலமைச்சராகிவிட வேண்டும் என்று ஆவேசமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் பி.ஆர்.எஸ். கட்சியின் சார்பில் மேடாக் எம்.பி. பிரபாகர் ரெட்டி துப்பாக் சட்டசபை தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அதன்படி சித்திபெட் மாவட்டத்தில் உள்ள தவுலாபாத் பகுதியில் உள்ள சுரம்பள்ளி கிராமத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் பிரபாகர் ரெட்டியிடம் கைகுலுக்க முயன்றார். அப்போது அந்த மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரபாகர் ரெட்டியின் வயிற்றில் குத்தினார்.
இதில் காயமடைந்த பிரபாகர் ரெட்டி மீட்கப்பட்டு அவரது காரிலேயே கஜ்வெல்லில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதற்கிடையில் பிரபாகர் ரெட்டியை கத்தியால் குத்திய மர்ம நபரை, அவரது ஆதரவாளர்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் ராஜூ என்று தெரியவந்துள்ளது. ராஜூ, பிரபாகர் ரெட்டியை ஏன் கத்தியால் குத்தினார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.