Share via:
லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவுக்கு போலீசார் அனுமதி அளித்துள்ளதாக முக்கிய தகவல் கிடைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, அர்ஜூன், சஞ்சய்தத் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து கடந்த 19ம் தேதி வெளியான திரைப்படம் லியோ. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமான முதல் நாள் முதல் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்தது. இசை வெளியீட்டு விழா ரத்து, சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி மறுப்பு என விஜய் ரசிகர்கள் மிகவும் துவண்டு போயிருந்தனர்.
இருப்பினும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் லியோ திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கலவையான விமர்சனங்களை இத்திரைப்படம் பெற்றிருந்தாலும் வசூலை பொறுத்த வரையில் பாக்ஸ் ஆபிசில் அடித்து நொறுக்கி வருவது விஜய் ரசிகர்கள் மத்தியில் புது உற்சாகத்தை கொடுத்து வருகிறது.
இந்நிலையில் வருகிற நவம்பர் 1ம் தேதி லியோ திரைப்படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்றும் அதில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார் என்றும் தகவல்கள் கசிந்தன. விழாவுக்கான அனுமதி கோரி படக்குழு சென்னை பெரியமேடு போலீஸ் நிலையத்தில் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளது.
இக்கடிதத்தின் மீது போலீசார் தீவிர ஆலோசனை நடத்தி சென்னை உள்விளையாட்டு அரங்கில் லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவுக்கான அனுமதியை வழங்கியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் குட்டி ஸ்டோரியை தவறவிட்ட ரசிகர்கள், லியோ வெற்றி விழாவில் எப்படியும் கேட்டுவிடுவோம் என்ற நம்பிக்கையில் துள்ளி குதித்து வருகிறார்கள்.