Share via:
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கும் முக்கிய மசோதா மேற்குவங்க மாநிலத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் (ஆகஸ்டு) 9ம் தேதி மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயதான முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தை எதிர்த்து நாடு முழுவதும் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர். கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் முதலில் தான்தான் குற்றத்தை செய்தேன். வேண்டுமென்றால் என்னை தூக்கில் போடுங்கள் என்று திமிராக வாக்குமூலம் கொடுத்த நிலையில் தற்போது அந்தர்பல்டி அடித்துள்ளார். இதைத்தொடர்ந்து விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில், உண்மையான குற்றவாளிகள் சட்டத்தில் இருந்து தப்பித்துவிடக் கூடாது என்பது பொது மக்களின் ஆதங்கமாக உள்ளது.
இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் இன்று கூடிய சிறப்பு சட்டசபைக் கூட்டத்தில் பலாத்கார தடுப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் முக்கிய அம்சமாக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கும் வகையிலான முக்கிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறும்போது, ‘‘புதிய மசோதா தாக்கல் நிறைவேறும் பட்சத்தில் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்கப்படும். மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றங்கள் வாயிலாக நீதி பெற்று வருகின்றனர். பாலியல் வன்கொடுமைகள் மனித குலத்திற்கு எதிரானவை என்பதால் உடனடியாக விசாரணை நடத்தி தண்டனை வழங்க இம்மசோதா வழிவகுக்கும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ள இம்மசோதாவில் பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் முக்கிய சரத்துகள் இணைக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் பெண்கள் உயிரிழக்கும் பட்சத்தில் உச்சபட்ச தண்டனையாக குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கப்படும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.