Share via:
இன்று காலை தொடங்கிய 2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றமுதல்
கூட்டத்தொடர் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கவர்னரும் எதிர்க்கட்சித் தலைவர்
எடப்பாடி பழனிசாமியும் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.
இன்றைய கூட்டத்திற்கு வருகை தந்தை ஆளுனருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
மற்றும் காவல்துறை மரியாதை அளிக்கப்ப்பட்டது. கருணாநிதி புத்தகத்தைக் கொடுத்து
சபாநாயகர் வரவேற்பு கொடுத்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்திய விதம்
மற்றும் அவையிலிருந்து அவர் வெளிநடப்பு செய்தது போன்றவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
அதேவகையில் இன்றைய கூட்டத்தொடரும் அமைந்தது.
ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவைக்குள் வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்துடன்
பேரவைக் கூட்டம் தொடங்கியது. தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று ஆளுநர்
கூறவே, அதனை ஏற்காத சபாநாயகர் அப்பாவு, அது சட்டப்பேரவை மரபு அல்ல என்றார். இதனால்
கோபமடைந்த ஆளுநர் ரவி, உரையைப் படிக்காமல் வெளிநடப்புச் செய்துவிட்டுச் சென்றுவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, ஆளுநர் உரையின் ஆங்கில பதிப்பை ஆளுநர் படித்ததாக
ஏற்க வேண்டும் என்ற தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். அது சட்டமன்ற உறுப்பினர்களின்
ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இந்த நேரத்தில் தமிழகத்தில் நடக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்துப்
பேச வேண்டும் என்ற கோரிக்கையுடன் எடப்பாடி பழனிசாமி எழுந்தார். அதற்கு சபாநாயகர் அனுமதி
மறுக்கவே, இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு
செய்தனர்.
சட்டப்பேரவை வளாகத்தில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து
முழக்கங்களை எழுப்பினர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள். “ஜனநாயகம் சட்டமன்றத்தில் செத்துப்
போச்சு” என்பது
போன்ற முழக்கங்களை எழுப்பி பரபரப்பைக் கிளப்பிவிட்டார்கள். ஆரம்பமே அமர்க்களம்தான்.
