Share via:
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று (நவ.17) கொடியேற்றதுடன் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழ்வது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை மாத தீபத்திருவிழா உலகப்பிரசித்தி பெற்றது. கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 2 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
அதன் பின்னர் 64 அடி உயரம் கொண்ட தங்கக் கொடிமரத்தில் அண்ணாமலையாருக்கு சிவாச்சரியார்கள் வேத மந்திரங்கள் முழுங்க கொடியேற்றப்பட்டு தீபத்திருவிழா இனிதே தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழாவில், காலை மாலை என இரு வேளைகளிலும் சாமி வீதி உலா நடைபெறும்.
வருகிற நவ.22ம் தேதி இரவு வெள்ளி ரதமும், 23ம் தேதி மகா தேரோட்டமும் நடைபெறும். விழாவின் நிறைவு நாளான வருகிற 26ம் தேதி அதிகாலை 4 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்படும். அதே போன்று அன்று மாலை 6 மணியளவில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.
மகாதீப திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் அவர்களுக்கான அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகளை கோவில் நிர்வாகம் துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

