Share via:
போலீசார் பணம் வாங்கிக் கொண்டு தான் என் மகனை கொன்றுவிட்டார்கள் என்று இன்று காலை என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடி சரவணனின் தந்தை பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அ.தி.மு.க. பிரமுகர் பார்த்திபன் கடந்த ஆகஸ்டு மாதம் 17ம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த செங்குன்றம் போலீசார், பிரபல கூலிப்படைத் தலைவன் முத்து சரவணன்தான் கொலையாளி என்று உறுதி செய்தது. அதைத்தொடர்ந்து தனிப்படை அமைத்த போலீசார் ரவுடி முத்து சரவணனை தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் ரவுடி முத்துசரவணன் மற்றும் அவனது கூட்டாளி சதீஷ் ஆகியோர் சுற்றி வளைக்கப்பட்டனர். அப்போது போலீசுக்கும் ரவுடிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்ட நிலையில் 2 ரவுடிகளும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். காயமடைந்த 3 போலீசார் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்நிலையில் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்ட ரவுடி முத்துசரவணனின் தந்தை கோவிந்தராஜ், செய்தியாளர்களிடம் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர்பேசும் போது, போலீசார், கொலையான அ.தி.மு.க. பிரமுகர் பார்த்திபனுடைய அண்ணனிடம் பணத்தை பெற்றுக் கொண்டு என் மகனை சுட்டுக் கொலை செய்துள்ளனர். மேலும் என் மகன் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் போலி என்று தெரிவித்தார்.
அதோடு என் மகன் சாவுக்கு காரணமான காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த கோவிந்தராஜ், என் மகன் சாவுக்கு நியாயம் கிடைக்காமல் அவரது உடலை வாங்கப்போவதில்லை என்று உறுதியாக தெரிவித்தார்.