Share via:
திருப்பூரில் நடைபெற்ற மேற்கு மண்டல கழக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க. குறித்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டார்.
திருப்பூரில் காங்கேயம் படியூர் அருகே நேற்று (செப்.24) மேற்கு மண்டல கழக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தி.மு.க. மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது முதலமைச்சர் பேசியதாவது:-
எடப்பாடி பழனிசாமி எதற்காக தனியாக சென்று உள்துறை அமைச்சரை சந்தித்தார்? 2 நாட்களுக்கு முன்னர் கூட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் ஒன்றிய அமைச்சர்களை திடீர் என்று சந்தித்தார்களே? இந்த மர்ம சந்திப்புகளுக்கு பின்னால் இருக்கும் அரசியல் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
இந்த லட்சணத்தில் ஒரே நாடு – ஒரே தேர்தலை பழனிசாமி ஆதரிக்கிறார். பழனிசாமி அவர்களே! சட்டமன்றத்துக்கும் சேர்த்து தேர்தல் வந்தால், உங்கள் கட்சி இப்போது இருக்கும் நிலைமைக்கு உள்ளதும் போய்விடும், ஜாக்கிரதை!
இதுவரை மக்களை ஏமாற்றிய பா.ஜ.க. – அ.தி.மு.க. இந்தத் தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட இருக்கிறது. மக்களின் இந்தக் கோபத்தை நமக்கான வாக்குகளாக மாற்ற வேண்டிய கடமை வாக்குச் சாவடி பொறுப்பாளர்களான உங்களுக்கு இருக்கிறது.
கட்சிக்காகவும், மக்களுக்காகவும் உழையுங்கள். இயக்கத்திற்காக இரவு பகல் பாராமல் உழைத்தவர்களை கழகம் எப்போதும் கைவிடாது.
இயக்கத்திற்காக ரத்த நாளங்களாக உழைக்கும் வாக்குச்சாவடி முகவர்களே, உங்களில் ஒருவனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உங்களிடம் வேண்டுகோள் வைத்து உரையாற்றி இருக்கிறேன்.
அடுத்த முறை உங்களைச் சந்திக்கும்போது, நான் வெற்றி செய்தியைத்தான் கேட்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம் என்று பேசிய மு.க.ஸ்டாலின், நாற்பதும் நமதே! நாடும் நமதே என்று தனது உரையை முடித்தார்.