Share via:
தமிழக சட்டசபைத் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் நாம் தமிழர்
கட்சி இன்று திருச்சியில் பிரமாண்டக் கூட்டம் நடத்துகிறது. இன்று 234 தொகுதி வேட்பாளர்கள்
ஒரே மேடையில் ஏறுகிறார்கள். இவர்களில் 117 பெண் வேட்பாளர்களும் 117 ஆண் வேட்பாளர்களும்
அடக்கம்.
கடந்த 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி, 2016 முதல்
தேர்தலைச் சந்தித்து வருகிறது. என்றாலும், ஆரம்ப காலம் முதல் அனைத்துத் தேர்தல்களிலும்
தனித்தே போட்டியிட்டு வருகிறது. இந்த தேர்தலிலும் தனித்தே களம் காண உள்ளது. இந்த நிலையில்,
‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு’ என்ற தலைப்பில், சீமான் தலைமையில் இன்று நாம்
தமிழர் கட்சியின் மாநாடு நடைபெறுகிறது.
நாம் தமிழர் கட்சியின் வழக்கத்துக்கு மாறாக திருச்சி மாநாட்டு
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருச்சி நகர்
பகுதியில் தொடங்கி மாநாட்டுத் திடலுக்கு 25 கி.மீ தூரம். வழிநெடுக அடிக்கு அடி கட்சி
கொடியும் 10 அடிக்கு ஒரு வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. சுமார் 100 கி.மீக்கு
கொடி, வரவேற்பு பேனர்கள் வைக்கப்படுள்ளது. இரண்டரை லட்சம் இருக்கைகள் வைக்கப்பட்டுள்ள
நிலையில், மாற்றுத்திறனாளிகள், முதியோர் அமர தனி இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
சீமான் தனது சொந்த மாவட்டமான காரைக்குடி தொகுதியிலும், வீரப்பன்
மகள் வித்யாராணி மேட்டூரிலும், இடும்பாவனம் கார்த்திக் வேதாரண்யத்திலும், இயக்குநர்
களஞ்சியம் ஆயிரம் விளக்கிலும் போட்டியிட உள்ளதாகத்தெரிகிறது.
2016ம் ஆண்டு கடலூரிலும், 2021ம் ஆண்டு திருவொற்றியூரிலும் சீமான்
போட்டியிட்டார். ஏற்கெனவே சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் 16 சதவீதத்திற்கும் மேலாக
வாக்குகளைப் பெற்று டெபாசிட் வாங்கியதால் இம்முறை காரைக்குடியில் சீமான் களமிறங்குவார்
என்று சொல்லப்படுகிறது.
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில்
நாம் தமிழர் 8 சதவிகித வாக்குகளைப் பெற்றது. இதையடுத்து, தேர்தல் ஆணையம் அவரது கட்சிக்கு
மாநில அந்தஸ்து வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த கட்சி 2016 சட்டமன்றத் தேர்தல்:
1.07% வாக்குகள்,, 2019 நாடாளுமன்றத் தேர்தல்: 3.9% வாக்குகள், 2021 சட்டமன்றத் தேர்தல்:
6.58% வாக்குகள், 2024 நாடாளுமன்றத் தேர்தல்: 8.2% வாக்குகள் பெற்றுள்ளது.
விஜய் வருகையில் அதிகம் பாதிக்கப்படுவது
சீமான் என்று சொல்லப்படுவது உண்மையா என்பது இந்த தேர்தலில் தெரிந்துவிடும்.
