Share via:
புயல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று அதிகாலை முதல் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் வேலைக்கு செல்வோர், வாகன ஓட்டிகள் ஆகியோர் கடும் அவதிக்கு ஆளானார்கள். பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் மாணவ, மாணவிகள் எப்படியோ தப்பித்துவிட்டார்கள் என்றுகிறார்கள் பெற்றோர்கள்.
இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அரபிக்கடலில் ஏற்கனவே உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு அது புயலாக வலுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்புயலுக்கு ‘தேஜ்’ என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில் இது மேலும் தீவிரமடைந்து தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதேபோல் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு சுற்றியுள்ள மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், குன்றத்தூர் உள்ளிட்ட இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.