Share via:
இன்று வேலூரில் விஜய் பரப்புரைக்கு மொத்தமே 5 ஆயிரம் பேர் மட்டுமே
அனுமதி. அதனால் அதற்கு மேல் யாரும் வரவேண்டாம் என்று தலைமையில் இருந்தே ஸ்ட்ரிக்ட்
ஆர்டர் போட்டார்கள். ஆனால், சட்டமாவது ஒன்றாவது என்று ரோட்டிலேயே ஆயிரக்கணக்கான மக்கள்
திரண்டுவிட்டார்கள்.
காவேரிபாக்கம் டோல்கேட் தொடங்கி வாலாஜா மேல விஷரம், சத்துவாச்சாரி,
கோணவட்டம், பொய்கை, செதுவாலை, பள்ளிகொண்டா என 7-15 கிலோ மீட்டர் இடைவெளிக்குள் கிட்டத்தட்ட
20 ஆயிரம் பேர் தன்னெழுச்சியாக திரண்டு வந்து வழிநெடுக காத்திருந்தார்கள். விஜய் காருக்குப்
பின்னே ஓடினார்கள். டூ வீலரில் சாகசம் காட்டுகிறார்கள்.
வேலூர் பிரச்சார கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், “எங்க ஓட்டு
எங்கள் உரிமை. எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு
தான். யாரையும் நம்பி ஏமாற மாட்டோம். எங்கள் வார்த்தையில் இருந்து மாற மாட்டோம். இது
நிஜம். ஒரு குட்டி கதையிலிருந்து ஆரம்பிப்போம். பெரிய ஏரியா. ஆள் நடமாட்டம் அதிகமாக
இருக்கும் ஏரியா. நடுவில் முரட்டு ஜல்லி கட்டு காளை நின்றுகொண்டிருக்கிறது.
காலில் மண்ணுடன் சீறிக்கொண்டு நிற்கிறது. யாரும் பக்கத்தில் செல்ல
முடியவில்லை. அந்த காளையை அடக்கி அமைதியாக்கினால் தான் அந்த இடம் இயல்பு நிலைக்கு திரும்பும்.
அந்த ஊரில் உள்ள சிலருக்கு மட்டும் தான் காளை அடங்கும். அவர்கள் யாரும் அங்கு இல்லை.
அங்க இருந்த சிலர், ‘நாங்க பாக்காத மாடா?’ என அந்த காளையை அடக்க செல்கிறார்கள். அவர்களால்
முடியவில்லை. அப்போது சிறுவன் ஒருவன் என்ட்ரி கொடுக்கிறார்.
அங்கிருந்தவர்கள், ‘எங்களாலேயே முடியவில்லை. நீ என்ன பண்ண போற’
என கிண்டல் செய்கிறார்கள். மறுபுறம் அந்த சிறுவன் மீது சிலர் பரிதாபப்படுகிறார்கள்.
இது எதையும் அந்த சிறுவன் காதில் வாங்காமல், இரண்டு கைகளையும் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு
ஸ்டைலாக காளை அருகே செல்கிறான்.
காளை சிறுவனை முட்ட வரும்போது, சிறுவன் பாக்கெட்டில் இருக்கும்
புல்லுகட்டை காளையிடம் காட்டுகிறான். அதை பார்த்த காளை புல்லு கட்டை சாப்பிட ஆரம்பிக்கிறது.
உடனே அந்த காளையை தடவி கொடுத்து வயல் வெளியில் காளையை மேய விட்டு வருகிறான். அப்போது
அடிப்பட்டு கிடந்த அனுபவசாலிகள் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். வாய் இருக்கிறது என்பதற்காக
நக்கல், நையாண்டியாக நச நச என பேசுகின்றனர்.
அனுபவசாலிகள் தலை குனிந்து நின்றுகொண்டிருக்கிறார்கள். அப்போது
அங்கு வந்த பெரியவர் ஒருவர் சிறுவனிடம், ‘எப்படி அடக்கினாய்’ என கேட்க, சிறுவன், ‘அந்த
காளை பசியுடன் இருந்தது. அதன் பசியை தீர்க்க புல்லுக்கட்டை எடுத்து வந்தேன்’ என்றானாம்.
ஆகவே யாராக இருந்தாலும், அந்த சூழலுக்கு ஏற்றார்போல அந்த பிரச்சினையை தீர்க்கிறார்
என்பது தான் விஷயம்.
இந்த கதையில் அந்த முரட்டு ஜல்லி கட்டு காளை தான் தமிழக அரசியல்
களம். அந்த களத்தில் காளையை அடக்க, பாக்கெட்டில் கை வைத்து கெத்தாக வந்தது, நான் மட்டுமல்ல,
நீங்கள்.. நாம் எல்லோரும் தான் அந்த சிறுவன். இத்தனை வருடங்களாக வேறு வழியில்லாமல்
ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த நம் மக்களை காக்க வந்தது தான் தவெக. இந்த
கதை யாருக்கு புரிய வேண்டுமோ அவர்களுக்கு புரியும்.
நான் நேரில் வந்து உங்களை சந்திக்க வேண்டும் என்பது தான் என் ஆசை.
ஒரு எதிர்கட்சியாக இருந்து கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நமக்கு எதிராக
என்ன சூழ்ச்சி நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். ஆகவே, நம் ஆட்சி அமைந்ததும்,
ஒவ்வொரு கிராமத்துக்கும் நேரடியாக வந்து என் சொந்தங்களாகிய உங்களை சந்திக்கிறேன். அண்மையில்
முதல்வர் ஸ்டாலின் ஒரு உருட்டு உருட்டினார். அதாவது, தமிழ்நாட்டுக்கும் – டெல்லிக்குமான
தேர்தல் என்கிறார்.
டெல்லியில் எதுவும் போட்டியிடுகிறீர்களா? பிறகு எதற்கு அதைப்பற்றி
பேசுகிறீர்கள். எந்த தேர்தலை எப்படி கையாள வேண்டும் என்பது நம் தமிழக மக்களுக்கு நன்கு
தெரியும். அவர்களை போல யாரையும் பார்க்க முடியாது. தெளிவாக இருப்பார்கள்.
போருக்கு போகும்போது தான் படை பரிவாரங்களுடன் செல்வார்கள். ஆனால்,
நீங்கள் எதற்கும் உதவாத பால் டப்பாவை உருட்டிக் கொண்டிருக்கிறீர்களே ஸ்டாலின் சார்.
உண்மையில் இந்த தேர்தல், தமிழ்நாட்டு மக்களுக்கு ஊழலுக்கும் நடக்கும் போர், தமிழ்நாட்டு
மக்களுக்கும் லஞ்சத்துக்கும் நடக்கும் போர், தமிழக மக்களுக்கும் திமுக அரசுக்கும் நடக்கும்
போர், தமிழக மக்களுக்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர். இன்னும் தெளிவாக சொல்ல
வேண்டுமென்றால், விஜய்க்கும் – ஸ்டாலினுக்கும் நடக்கும் போர். இதற்கு நடுவில் என்டிஏ,
டெல்லி என்ன லாஜிக் என்பது புரியவில்லை. தூய சக்தி தவெக – தீய திமுகவுக்கும் இடையில்
தான் இந்த போர்.’’ என்றார்.