Share via:
திண்டுக்கல் மாவட்டத்தில் கார் ஓட்டுநரை அடித்து கொலை செய்த வழக்கில் கடந்த 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளரை சென்னையில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், அம்பிளிக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் ஒட்டன்சத்திரம் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் நடராஜனிடம் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அந்த பணியுடன் சேர்த்து நடராஜன் நடத்தி வரும் நெய் கம்பெனியில் பணம் வசூல் செய்யும் வேலையையும் சேர்த்து பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கார் ஓட்டுநர் ரூ.6 லட்சம் கையாடல் செய்துவிட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நடராஜனுக்கு சம்பந்தப்பட்டவர்கள் தலைமறைவான சுரேஷ்குமாரை பல இடங்களில் தேடிய நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் அவர் பிடிபட்டார். அப்போது நடராஜன் வீட்டில் வைத்து சுரேஷ்குமாரிடம் விசாரித்துக் கொண்டிருந்த போது, சுரேஷ்குமார் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் உயிரிழந்த சுரேஷ்குமாரின் உடல் அம்பிளிக்கை மயானத்தில் யாருக்கும் தெரியாமல் எரித்துள்ளனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன் அம்பிளிக்கை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
போலீசார் விசாரணையில் மனோகரன், பாண்டி, சிவஞானம், சதீஸ்குமார், முத்துக்குமாரை போலீசார் கைது செய்தபோது இந்த கொலை சம்பவத்தில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் நடராஜனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து தலைமறைவான நடராஜனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த நடராஜனை அடையாளம் கண்ட போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நடராஜன் ஒட்டன்சத்திரம் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவ்விவகாரம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.