Share via:
நடிகையும் பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்த ஜெயப்பிரதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஜெயப்பிரதா. இவர் தமிழில் நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி, கடைசியாக தசாவதாரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமல்லாமல் கடந்த 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. உறுப்பினராக பதவி வகித்து வந்தார்.
சென்னை அண்ணாசாலையில் ஜெயப்பிரதாவுக்கு சொந்தமாக ஒரு திரையரங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. தொகை பிடிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் அந்த தொகையை அரசு காப்பீட்டுக் கழகத்தில் ஜெயப்பிரதா செலுத்தவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேர் மீது தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் கடந்த ஆகஸ்டு மாதம் 11ம் தேதி ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயப்பிரதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் இன்று (அக்.20) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், எழும்பூர் நீதிமன்றம் ஜெயப்பிரதாவுக்கு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து 6 மாத சிறை தண்டனை விதித்தனர். மேலும் ஜெயப்பிரதா ரூ.20 லட்சம் டெபாசிட் செய்யவும், 15 நாட்களில் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பு திரையுலகினர் மத்தியிலும் பா.ஜ.க.வினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.