Share via:
தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மல்லிப்பட்டினத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதில் தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியையாக 26 வயதான ரமணி என்பவர் பணியாற்றி வந்தார். நேற்று (நவம்பர் 20) ரமணி பள்ளி வளாகத்தில் இருந்த போது மதன்குமார் என்ற இளைஞரால் கத்தியால் குத்தப்பட்டார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரமணி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த சேதுபாவாசத்திரம் போலீசார், ஆசிரியை ரமணியை கொலை செய்த மதன்குமாரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் பள்ளி வளாகத்தில் கொலை செய்யப்பட்ட ரமணியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குற்றவாளிக்கு சட்டப்படி தகுந்த தண்டனை கொடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதன் பின்னர் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ரமணியின் பெற்றோரிடம், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கிய நிலையில், அரசு பள்ளி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியையின் குடும்பத்திற்கு வெறும் 5 லட்சம் ரூபாய் மட்டுமே நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்று விமர்சித்து வருகின்றனர்.