Share via:
சிங்கப்பூரில்
நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப்
போட்டியில் சீன வீரர் டிங்
லிரேனை வீழ்த்தி, தமிழகத்தைச் சேர்ந்த
இந்திய வீரர் குகேஷ் சாம்பியன்
பட்டம் பெற்றதுடன் மிகவும் இளவயதில் உலக செஸ்
சாம்பியன் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். தமிழக அரசின் நிதியுதவியுடன் விளையாடி
வெற்றி பெற்றிருக்கும் குகேஷை தெலுங்கு பையனுக்கு வாழ்த்துக்கள் என்று சந்திரபாபு நாயுடு
இனம் பிரித்துக் காட்டியிருப்பது சர்ச்சையை எழுப்பியிருக்கிறது.
ஒருவர் வெற்றி பெறாத
வரையிலும் யாரும் கண்டுகொள்ளவே மாட்டார்கள். அவர் வெற்றி பெற்று, புகழ் உச்சத்திற்கு
செல்லும் போது அவருடைய ஜாதியும், மதமும் உறவுகளும் சொந்தம் கொண்டாட துவங்குவார்கள்.
இந்த அரசியல் விளையாட்டில் குகேஷ் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று அவரது ஆதரவாளர்கள்
வேண்டுகோள் வைக்கிறார்கள்.
குகேஷ் வெற்றிக்கு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி தமிழக முதல்வர் ஸ்டாலின் வரை வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
இவர்களில் ஆந்திர முதலமைச்சர் மட்டுமே, ‘நமது தெலுங்கு பையனுக்கு வாழ்த்துக்கள்’ என்று
அவரது பூர்வீகத்தைத் தோண்டியெடுத்து சொந்தம் கொண்டாடியிருக்கிறார்.
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை
வென்ற குகேஷ் சென்னையில் பிறந்து,
வளர்ந்தவர். தமிழ்நாட்டில் படிந்து, தமிழ் பேசக்
கூடியவர். தமிழ்நாடு அரசின் நிதி
உதவியுடன் உலக செஸ் போட்டிகளில்
பங்கேற்றவர். அவரை தமிழர் என்பதாகவோ,
தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதாகவோ கொண்டாடுவதில் எந்த
தவறும் இல்லை. ஆனால்
இதுவரை எந்த உதவிகளும் செய்யாமல் வெற்றி பெற்றதும், தெலுங்கரின் வெற்றி என்று அடையாளப்படுத்துவது
அவசியமற்றது. தெலுங்கு சமூக சங்கத்தினர் இப்படி பாராட்டுவதைக் கூட ஏற்கலாம். ஆனால்,
முதல்வர் அடையாளம் காட்டலாமா என்றே கேள்வி எழுப்புகிறார்கள.
இதையடுத்து இப்போது
குகேஷை சத்திரியர் என்று ஒரு சாதி குரூப் சொந்தம் கொண்டாடுகிறார்கள். குகேசின்
முழு பெயர் குகேஷ் தொம்மராஜு
என்பதாகும். இதில் தொம்மராஜு என்பது
ராயலசீமா பகுதி ‘ராஜூ சத்திரிய
வகுப்பினரின் பட்டப்பெயர்‘ என ஆந்திர
பகுதியினர் கூறுகின்றனர் (பசுபதி கோத்திரம், தொம்மராஜு).
இதனடிப்படையில் அவர் ஒரு குறிப்பிட்ட
சாதியை சேர்ந்தவர் என்றும் கொண்டாடுகிறார்கள்.
ஒருவர் வெற்றி பெறும்போது, எல்லா
அடையாளங்கள் அடிப்படையிலும் அவர் கொண்டாடப்படுவது நல்ல விஷயமே. அதேநேரம், இதில் அரசியல் புகுந்து
அவரது எதிர்காலத்தைப் பாதித்துவிடக் கூடாது. அவரும் இதுபோன்ற அடையாளங்களில் சிக்கிக்கொள்ளக்
கூடாது.