Share via:
இன்று நடைபெற்று வரும் தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவில் திரையுலகமே திரண்டு வந்து வாக்குப்பதிவு செய்து தங்கள் ஜனநாயகக் கடமையாற்றினர்.
199 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானாவில் நேற்று முன்தினத்துடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று (நவ.29) காலை முதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை முன்னதாக வாக்குச்சாவடி அதிகாரிகள், முகவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் முன்னிலையில் வாக்குச்சாவடி எந்திரங்கள் சரியாக வேலை செய்கிறதா? என்று பரிசோதித்து பார்க்கப்பட்டதன் தொடர்ச்சியாக வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடியில் இன்று காலை முதலே நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்து வாக்களித்தனர். அவர்களுடன் சேர்ந்து திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்களும் தங்கள் வாக்குப்பதிவை செலுத்தினர்.
அதன்படி ஐதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதி வாக்குச்சாவடியில் நடிகர் நாகார்ஜூன் தனது மனைவி அமலாவுடன் இணைந்து வாக்களித்தார். அதேபோல் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீனி தனது குடும்பத்தாருடன் வரிசையில் நின்று வாக்களித்தார். நடிகர்கள் அல்லு அர்ஜூன், ஜூனியர் என்.டி.ஆர்., இயக்குனர் ராஜமௌலி ஆகியோர் வாக்களித்தனர்.
அப்போது நடிகர் அல்லு அர்ஜூனுடன் இணைந்து, பொது மக்கள் சிலர் செல்பி எடுத்துக் கொள்ள விரும்புவதாக தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அல்லு அர்ஜூன் பொது மக்களுடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டார்.