Share via:
இந்தியாவை ஆளும் பா.ஜ.க.வுக்கும் தமிழகத்தில் ஆளும் தி.மு.க.வுக்கும் எதிராக ஏதேனும் பரபரப்பான அரசியல் சம்பவங்கள் நடைபெறும் நேரத்தில் எல்லாம், அதனை திசை திருப்புவது போன்று திராவிடத்தைக் கையில் எடுத்து கம்பு சுற்றத் தொடங்கிவிடுகிறார்கள். மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லாத திராவிடத்தில் தான் ஒட்டுமொத்த தமிழர்களின் மானமும் மரியாதையும் இருப்பது போன்று தி.மு.கவும், அதனை எதிர்ப்பது போன்று பா.ஜ.க.வும் பாவ்லா காட்டி மக்களை முட்டாளாக்கி வருகிறார்கள்.
கவர்னர் கலந்துகொண்ட விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்தில் ஒரே ஒரு வார்த்தை மாறியது என்பதற்காக, தமிழகம் முழுக்க தி.மு.க.வினர் கடுமையான எதிர்ப்பு காட்டினார்கள். தமிழன்னைக்கு ஒரு ஆபத்து என்றால் சும்மா விட மாட்டோம் என்று முழங்கினார்கள்.
ஆனால், அடுத்த சில நாட்களில் உதயநிதி கலந்துகொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை இரண்டு முறை குத்திக் கிழித்தார்கள். இது கூட பரவாயில்லை,. முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதையே மறந்துபோனாகள்.
தங்களுக்கு ஒரு பிரச்னை என்றால் தமிழ்த்தாய், திராவிடக் கலாச்சாரம் என்றெல்லாம் வீரம் பேசும் தி.மு.க.வும் அதனை எதிர்ப்பது போல் தேசியம் பேசும் பா.ஜ.க.வும் கை தேர்ந்த நடிகர்களாகவே இருப்பதை மக்கள் பார்க்கத்தான் செய்கிறார்கள். இப்போது புதிதாக வந்திருக்கும் நடிகர் விஜய்யும், திராவிடமும் தேசியமும் இரண்டு கண்கள் என்று ஒரு புதிய குழப்பத்தை உருவாக்கப் பார்க்கிறார்.
தமிழும் தேசியமும் விளையாட்டுப் பொருளாகிப் போச்சு.