Share via:
ஆவின்பாலகம் 24 மணிநேரமும் தொடர்ந்து இயங்கும் என்று தமிழக அரசு திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த மண்டலம் இன்று (நவம்பர் 26) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நாளை உருவாக உள்ள புயலுக்கு சவுதி அரேபியா ‘பெங்கல்’ என்ற பெயரை பரிந்துரை செய்துள்ளது.
பெங்கல் புயலானது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும்போது, அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, புதுச்சேரி இடையே அது கரையை கடக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், இதன் காரணமாக இன்று முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இந்நிலையில் அதிகனமழை காரணமாக சென்னையில் உள்ள 8 ஆவின் பாலகங்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் செயல்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. கனமழையின் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தமிழக அரசு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ஆவின் நிர்வாக இயக்குனர் அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன்படி அம்பத்தூர் பால்பண்ணை கேட், அண்ணாநகர் டவர் பூங்கா, மாதவரம் பால் பண்ணை, வண்ணாந்துரை மற்றும் பெசன்ட் நகர், வசந்தம் காலனி, அண்ணாநகர் கிழக்கு, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம், சி.பி.ராமசாமி சாலை ஆகிய 8 பாலகங்கள் தடையின்றி 24 மணிநேரம் செயல்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பால் தங்கு தடையின்றி கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.