Share via:
கடந்த புயல், மழை, வெள்ள நேரத்தில் தூத்துக்குடி மக்களுடன் மக்களாக
நின்ற கனிமொழி, இப்போது பெய்திருக்கும் மழை, வெள்ளம் குறித்து, ‘தூத்துக்குடியில் மழையால்
பாதிப்பில்லை’ என்று கூறிவிட்டார். அதோடு நிவாரண நிதி வழங்கவும் செல்லவில்லை. இதனை
தமிழிசை செளந்தர்ராஜன் கேள்வி எழுப்பிய காரணத்தால் ஒட்டுமொத்த தி.மு.க.வினரும் திரண்டுவந்து
தாக்குகிறார்கள்.
தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் கனிமொழி ஆய்வுகள் மேற்கொண்டார்.
இது குறித்து அவர், ‘’தூத்துக்குடி, தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள ஏரல்
பாலம் பகுதியில் இன்று அரசுத்துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டேன். மிகப்பெரிய
பாதிப்பு இல்லை, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது’’
என்று கூறினார்.
இதற்கு முன்னாள் கவர்னரும் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான தமிழிசை
செளந்தரராஜன், ‘’முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து கொண்டு மழையால் பாதிப்பு இல்லை என்று
மக்களை ஏமாற்றுவதுதான் திராவிட மாடல்? மழை,வெள்ள பாதிப்பால் மக்கள் பரிதவித்துக்கொண்டிருக்கும்
போது மழையால் பாதிப்பில்லை என்று கூறுகிறீர்களே? உங்கள் பார்வையில் மழை, வெள்ள பாதிப்பின்
அளவுகோல் என்ன?’ என்று கனிமொழியிடம் கேட்டிருந்தார்.
அதற்குப் பதில் அளித்திருக்கும் அமைச்சர் கீதா ஜீவன், ‘’புதுச்சேரியில்
ஆளுநர் பதவி போதாது என ஒன்றிய அமைச்சர் கனவுடன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவரின்
சுயநல நோக்கை புரிந்து கொண்ட மக்கள் தோல்வியை பரிசளித்து விரட்டியடித்தார்கள். அந்த
வன்மத்தில் நாடாளுமன்றக்கூட்டத் தொடர் நடந்தாலும் கூட கிடைத்த இடைவெளியில் ஓடோடி வந்து
மழை நிவாரணப்பணிகளை உள்ளார்ந்த உணர்வோடு மேற்கொள்ளும்
நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி அவர்களின் பணிகளைப் பார்த்து ‘ஏமாற்றுவதுதான்
திராவிடமாடல்’ என்று கூச்சமே இல்லாமல் பேசியிருக்கிறார் தமிழிசை…’’ என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
அதோடு தி.மு.க.வினர், ‘’கணுக்கால் அளவு தண்ணீரில் போட் விடும்
கட்சியைச் சார்ந்தவர் (என்பதால் காமாலைக் கண்ணோடு பார்க்கிறார். இரவு பகல் பாராது களத்தில்
பணியாற்றினாலும் இயற்கை கைமீறும் போதும் மக்களோடு மக்களாக நிற்பதுதான் திராவிடமாடல்.
அப்படித்தான் நின்று கொண்டிருக்கிறோம் சரி நீங்க
சொல்ற மாதிரி பெரிய பாதிப்புண்ணு வச்சுக்குவோம். ஒன்றிய அரசு ஏன் இதுவரை வந்து அந்த
மக்களை பாக்கல.. உங்க PM எங்க இருக்காரு? உடனடியாக நிவாரணம் அறிவிக்க வேண்டியது தானே?
ஏன் வந்து பாக்கல? அப்போ நீங்க கரெக்ட் ரிப்போர்ட் குடுக்கலயா? குடுத்தும் உங்களை தமிழ்நாட்ட
மோடி மதிக்கலயா?.’ என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள்.
தமிழிசையும் என்னவெல்லாமோ பேசிப் பார்க்கிறார், லைம்லைட்டுக்கு
வர விட மாட்றாங்களே…