Share via:
டெல்லிக்கு செல்வதற்கு
முன்பு தமிழிசை செளந்தரராஜன், ‘’இன்னும் 10 நாட்களில் மாநிலத் தலைவர்கள் மாற்றம் நடைபெற
உள்ளது. அதற்காக பா.ஜ.க. தலைவர் நட்டாவை சந்திக்கச் செல்கிறேன்’’ என்று வெளிப்படையாகக்
கொடுத்திருக்கும் பேட்டி பா.ஜ.க.வில் சூறாவளியாக சுழன்று அடிக்கிறது.
வரும் சட்டமன்றத்
தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே பா.ஜ.க.வுக்கு எம்.எல்.ஏ.க்கள்
கிடைப்பார்கள் என்பது மூத்த பா.ஜ.க. தலைவர்கள் கருத்தாக இருக்கிறது. ஆனால், அண்ணாமலை
தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில் பா.ஜ.க. தனித்து நிற்பதையே விரும்புகிறார். இந்த
நிலையில் கடைசி முயற்சியாக அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்
கொள்வதற்கு தன்னையே சாட்டையால் அடித்துக்கொண்டார்.
ஆனால், அந்த விவகாரம்
தமிழகம் முழுக்க கேலியும் கிண்டலுமாக வைரலாகிவிட்டது. ஆகவே இப்போது மதுரையில் இருந்து
சென்னை வரையிலும் நீதி கேட்டுப் போராடம் நடத்த இருக்கிறார். இது குறித்து அண்ணாமலை
இன்று, ‘’தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், தொடர்ந்து அதிகரித்து
வருகின்றன. குற்றவாளிகள் திமுகவினராக இருப்பதால், பெரும்பாலும் உடனுக்குடன் நடவடிக்கை
எடுக்காமல் தாமதப்படுத்தி, குற்றத்தை மூடி மறைக்க முயல்கிறது திமுக தரப்பு.
அண்ணா பல்கலைக்கழக
மாணவி மீதான பாலியல் தாக்குதல் வழக்கிலும், கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகியுடன்,
கைப்பேசியில் பேசிய நபர் யார் என்ற உண்மையை முழுவதுமாக மறைக்க முயற்சிக்கிறது. இன்னும்
ஒரு படி மேல் சென்று, பாதிக்கப்பட்ட மாணவியை, பொதுவெளியிலும், மாமன்றத்திலும் அவமானப்படுத்தியும்,
மாணவி குறித்த தனிப்பட்ட விவரங்களைக் கசிய விட்டு, இனி யாரும் குற்றவாளிகள் மீது புகார்
கொடுக்க அச்சப்படும் அளவிற்கு மறைமுகமாக மிரட்டியும், தரம் தாழ்ந்தும் சென்று கொண்டிருக்கிறது
திமுக அரசு.
திமுக அரசின் இந்தப்
பெண்கள் விரோதச் செயல்பாடுகளைக் கண்டித்தும், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாதிக்கப்பட்ட
வழக்கில், முழு உண்மையும் வெளிக்கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பா.ஜ.க
மகளிர் அணி சார்பில், வரும் 03.01.2025 அன்று மதுரையில் தொடங்கி, சென்னை வரை நடைபெறவிருக்கும்
நீதி கேட்பு பேரணி நடக்கும்’’ என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த போராட்டம் மூலம்
தன்னுடைய பதவியை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறார் அண்ணாமலை. மீண்டும்
தலைவர் பதவி அடையவேண்டும் என்பதற்காக அவரது ஆதரவாளர்கள், ‘’மீண்டும் அண்ணாமலையை தமிழக
பா.ஜ.க. மாநிலத் தலைவராக மாற்றி, முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை
வைக்கிறார்கள். அதோடு மாநிலத் தலைவர்கள் மாற்றம் குறித்துப் பேசிய தமிழிசைக்கு எதிராகவும்
காட்டமாக விமர்சிக்கிறார்கள்.
அண்ணாமலை மாற்றமா,
ஏமாற்றமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.