Share via:
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், அக்டோபர் மாதம் 27ம் தேதி தனது கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்த உள்ளார். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்பார்வையிட்டு வருகிறார் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த்.
ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விஜய் மற்றும் புஸ்சி ஆனந்த் தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். மாநாட்டிற்கான பூஜை மேற்கொள்ளப்பட்டு பந்தல் நடுவது உள்ளிட்ட அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு 3 நாட்கள் முன்னதாக மாநாடு நடப்பதால் கூட்டநெரிசல் ஏற்படக்கூடாது என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் அமர்வதற்கான வசதிகள், குடிநீர் வசதி, மருத்துவ வசதி, வாகனங்கள் நிறுத்தும் வசதி, பெண்கள், குழந்தைகள், முதியோருக்கான பாதுகாப்பு வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் கட்சி நிர்வாகிகள் மற்றும் விழுப்புரம் மாவட்ட உள்ளூர் ரசிகர்களும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அஸ்ரா கார்க் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் இன்று (அக்டோபர் 9) திடீர் ஆலோசனை மேற்கொண்டனர். விழுப்புரம் மாவட்டம் எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.