மக்களவைத் தேர்தல் 2024ல் பா.ஜ.க.வின் முக்கியமான சாதனையாக ராமர் கோயி காட்டப்படுகிறது. ஜனவரி 22-ம் தேதி பிரதமர் மோடி ராமர் கோயிலைத் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது. இதனை பா.ஜ.க. பெருமையுடன் சொல்லிவரும் நிலையில், ராமர் நெற்றியில் சூரியக் கதிர் பொட்டு விழுந்திருப்பதாக சமூக வலைதளங்களில் டிரெண்டிங் செய்தார்கள்.

ராம நவமியன்று மிகச்சரியாக பகல் 12.01 மணிக்கு அயோத்தி கோயிலில் உள்ள ராமரின் முன்நெற்றியில் திலகம் போல சூரியக் கதிர்கள் விழுந்தன. சுமார் இரண்டு, இரண்டரை நிமிடங்கள் நிகழ்வு நீடித்தது. சூரிய திலகத்தின் நீளம் சுமார் 58 மி.மீ வரை இருந்தது. இந்த நிகழ்வு அயோத்தியின் 100 இடங்களில் பெரிய எல்இடி திரையில் திரையிடப்பட்டன. கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்களின் உதவியுடன் இந்த சூரிய திலகம் விழுவது சாத்தியப்படுத்தப்பட்டது.

ராமர் பிறந்த தினத்தில் அவருக்கு சூரியக் கதிர்கள் வந்து வாழ்த்து சொல்கின்றன என்றெல்லாம் பலரும் பெருமிதப்பட்டு இருந்தனர்.

இதனிடையே, இந்தச் சூரிய திலகம் நிகழ்ந்த போது, அசாமில் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த பிரதமர் மோடி, ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட்டார். அவர் கூறுகையில், “நாடு முழுவதும் ஒரு புதிய சூழல் உருவாகியுள்ளது. 500 ஆண்டுகளுக்குப் பின்னர் வரும் ராமரின் இந்தப் பிறந்த நாளில், ராமர் தனது பிறந்த நாளை அவரது சொந்த வீட்டில் கொண்டாடும் பாக்கியம் கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.

இப்போது, அந்த சூரியக் கதிர்கள் எப்படி விழ வைக்கப்பட்டது என்பது ஆதாரபூர்வமாக வெளிவந்துள்ளது. ஆண்டுதோறும் ராமநவமி தினத்தில் அயோத்தி ராமர் கோயில் பாலராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் வண்ணம் கோயில் கட்டப்பட்டுள்ளது.

அதிநவீன அறிவியல் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, 5.8 சென்டிமீட்டர் சூரிய ஒளிக்கற்றை பாலராமர் சிலையின் நெற்றியில் விழும் வண்ணம் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வை அடைய, கோயிலில் ஒரு சிறப்பு கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 10 விஞ்ஞானிகள் அடங்கிய குழு கோயிலில் பார்வையிட்டு அந்தக் கருவியை வடிவமைத்தனர். கண்ணாடிகள், லென்ஸ்களின் உதவியுடன் இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சூரிய திலக் பொறியியல் முறை என பெயரிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரூர்க்கியைச் சேர்ந்த மத்திய கட்டிடவியல் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட்டை (சிபிஆர்ஐ) சேர்ந்த விஞ்ஞானியும், இயக்குநருமான குமார் ராமசர்லா, ‘’இந்தக் கருவி ஆப்டோ-மெக்கானிக்கல் வகையைச் சார்ந்தது. இந்த ஆப்டோ-மெக்கானிக்கல் அமைப்பானது 4 கண்ணாடிகள் மற்றும் நான்கு லென்ஸ்களைக் கொண்டது. திருப்பும் வகையிலும், சாய்வு முறையிலும் இந்த கருவி அமைந்துள்ளது.

மேலும் இந்தக் கண்ணாடிகள், லென்ஸ்கள் குழாய் அமைப்புகளுக்குள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கருவியானது கோயிலின் மேல் தளத்தில் பொருத்தப்பட்டு சூரிய ஒளியைப் பெற்று கண்ணாடி, லென்ஸ்கள் மூலம் கீழ்தளத்தின் கர்ப்பக்கிரகத்திலுள்ள பாலராமர் சிலையின் நெற்றியில் விழுமாறு திருப்பி அனுப்பப்படுகிறது.

மேல் தளத்தில் உள்ள கருவியின் மேல்பகுதியானது சூரிய ஒளியின் வெப்பம், அலையைத் தாங்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகப்படியான வெப்பத்தைக் குறைத்து சிலையின் நெற்றியில் விழும்படி இந்தக் கருவி செயல்படுகிறது’’ என்று தெரிவித்திருக்கிறார்.

மகர ஜோதியை இன்னமும் உண்மை என்று நம்பும் மக்கள் இருக்கும் வரையில் இப்படி எல்லாம் பொய் சொல்லி ஆட்சியைப் பிடிக்கத்தான் செய்வார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link