Share via:
எக்மோர் மக்களுக்கு சூப்பர் வாய்ப்பு. திமுக எம்எல்ஏ புதிய அப்ரோச்..!
பெண்களுக்கு இலவச பஸ் பயணம், ,மகளிர் உரிமைத் தொகை ஆகிய இரண்டு
ஸ்டாலின் திட்டங்களும் பட்டிதொட்டி மக்கள் வரையிலும் போய் சேர்ந்துவிட்டது. ஆனால்,
புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் தொடங்கி புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா
வழங்குவது வரையிலும் ஏராளமான நலத்திட்டங்களை ஸ்டாலின் அறிவித்துக்கொண்டெ இருக்கிறார்.
இப்படி முதல்வர் ஸ்டாலின் அறிவிக்கும் திட்டங்கள் எல்லாமே தன்னுடைய
எழும்பூர் தொகுதி மக்களுக்கு முழுமையாகத் தெரிந்திருக்கிறதா..? என்ன என்ன திட்டங்கள்
இருக்கின்றன என்பதெல்லாம் தெரிகிறதா என்பதை எல்லாம் அறிந்துகொள்வதற்கும், தன்னுடைய
தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டறியவும் எழும்பூர்
சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியிருக்கிறார். அதன்படி,
அவரது 50க்கும் மேற்பட்ட சமூகசேவையாளர்கள் கொண்ட குழு களப்பணியில் இறக்கிவிடப்பட்டுள்ளது.
இந்த களப்பணி குழுவினர் வீடு வீடாகச் சென்று முதல்வர் ஸ்டாலினின்
திராவிட மாடல் அரசு செயல்படுத்திவரும் நலத்திட்ட உதவிகள் அடங்கிய கையேட்டை குடும்பத்தினரிடம்
வழங்குவது மட்டுமின்றி, அந்த திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கிறார்கள். அதோடு,
தகுதியுள்ள அனைவருக்கும் திராவிட மாடல் அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை,
புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், முதியோர் உதவித்
தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை போன்ற உதவிகள் கிடைக்கிறதா என்பதை கேட்டு
அறிகிறார்கள்.
அதோடு, குடும்பத்தில் சுய உதவிக் குழுவில் சேர்ந்திருக்கிறார்களா
அல்லது சேர விரும்புகிறார்களா? என்றும் மேலும் சிறு தொழில் தொடங்குவதற்கு விருப்பம்
இருக்கிறதா என்பதையும் கேட்டு அறிகிறார்கள். அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியம்,
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நலத்திட்டங்கள், பிற்படுத்தப்பட்டோருக்கான உதவிகள்
குறித்தும் மக்களுக்குப் போதுமான விழிப்புணர்வு கொடுக்கபடுகிறது.
திராவிட மாடல் அரசு வழங்கும் திட்டத்தில் இணைய விரும்பும் நபர்கள்
எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமனை தொடர்பு கொள்வதற்கு வசதியாக க்யூ ஆர் கோடு கொண்ட ஸ்டிக்கர்
வீடு தோறும் ஒட்டப்படுகிறது. இதன் மூலம் அரசு உதவிகள் பெற விரும்பும் நபர்கள் நேரடியாக
பரந்தாமன் எம்.எல்.ஏ. அலுவலகத்துடன் தொடர்புகொள்ள முடியும்.
அரசு நலத்திட்ட உதவிகள் பெற விருப்பம் தெரிவிக்கும் நபர்கள், திட்டம்
குறித்து அறிய விரும்பும் நபர்களுக்காக சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, உதவி வேண்டுபவருக்குத்
தேவையான உதவிகள் செய்வதற்கும் பரந்தாமன் எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்திருக்கிறார்.
அரசு நலத்திட்டத்தைத் தேடி அலைய வேண்டாம், வீடு தேடி வந்து சேர்க்கும்
வகையில் பரந்தாமன் எம்.எல்.ஏ. மேற்கொண்டிருக்கும் இந்த முயற்சி ரொம்பவே புதுசு.