Share via:

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு சென்று எட்டே நாளில் திரும்ப
வேண்டிய சுனிதா வில்லியம்ஸ் விண்கலம் பழுதடைந்த காரணத்தால் ஒன்பது மாதங்கள் விண்வெளி
மையத்திலேயே தங்கி இருக்கவேண்டிய கட்டாய சூழல் நிலவியது. உயிருடன் சுனிதாவை மீட்பது
மிகப்பெரும் சவாலாக கருதப்பட்ட நிலையில், மிகவும் கஷ்டப்பட்டு மீட்கப்பட்டுள்ளார்.
இந்தியத் தந்தைக்கும், சுலொவீனியத் தாய்க்கும் ஒகையோவின் யூக்லிட்டில்
பிறந்தவர் சுனிதா. இவரது தந்தை தீபக் பாண்டியா, குசராத்தின் மெக்சனா மாவட்டத்தைச் சேர்ந்த
இந்திய-அமெரிக்க நரம்பியல் நிபுணர்.
கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த
ஸ்டார்லைனர் என்ற புதிய விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் ஐஎஸ்எஸ் எனப்படும்
சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றனர். 8 நாட்கள் அங்கு இருந்து ஆய்வுகளை மேற்கொள்ள
இருந்தனர். ஆனால் ஸ்டார்லைனரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படவே சுனிதா, வில்மோர் அங்கேயே
தங்கும் நிலை ஏற்பட்டது. 8 நாட்கள் பயணம் 9 மாதங்களானது இதனால் தான். இந்த 286 நாட்களில்
சுனிதாவும், வில்மோரும் விண்வெளியில் 121 மில்லியன் ஸ்டாட்யூட் மைல் பயணித்துள்ளனர்.
ஒரு ஸ்டாட்யூட் மைல் என்பது கிட்டத்தட்ட 5280 அடி எனக் கொள்ளலாம்.
– பொதுவாகவே, சர்வதேச விண்வெளி நிலையத்தில்
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீரர்கள் தங்கியிருந்து ஆய்வு செய்வதும், புதிய வீரர்கள்
ஐஎஸ்எஸ் நிலையம் வந்த பிறகு அவர்களிடம் பணிகளை ஒப்படைத்துவிட்டு பழைய வீரர்கள் பூமிக்கு
திரும்புவதும் வழக்கம். இப்படித்தான் சுனிதாவும், வில்மோரும் அங்கு சென்றனர். இப்போது
அவர்கள் பூமிக்குத் திரும்பிய நிலையில் புதிய குழுவினர் ஐஎஸ்எஸ் விண்வெளி நிலைய ஆராய்ச்சியில்
ஈடுபட்டுள்ளனர். எனவே, சுனிதாவும், வில்மோரும் அங்கே சிக்கிக் கொண்டார்கள் என்று சொல்வதற்குப்
பின்னணியில் சில அரசியல் காரணங்கள் இருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.
ஸ்பேஸ் எக்ஸ், நாசா இணைந்து விண்வெளி வீரர்களை பத்திரமாக பூமிக்கு
அழைத்து வந்த நிலையில் வெள்ளை மாளிகை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், “வாக்குறுதி
அளித்தார். அதை நிறைவேற்றினார். 9 மாதங்களாக விண்வெளியில் சிக்கிக் கொண்ட வீரர்களை
ட்ரம்ப் பத்திரமாக மீட்டுக் கொண்டுவந்துள்ளார். நாசா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களுக்கும்
எலான் மஸ்குக்கும் நன்றி.” என்று குறிப்பிட்டுள்ளது.
தொடர்ச்சியாக பல மாதங்கள் விண்வெளியில் இருந்துவிட்டதால் கை, கால்
செயல்பாடுகளில் சிரமம், தலை சுற்றல், தசை சிதைவு உள்ளிட்ட பல்வேறு உபாதைகளுக்கு விண்வெளி
வீரர்கள் ஆளாகக்கூடும் என்பதால் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேரும் ஹூஸ்டனில் உள்ள
நாசா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஓரிரு தினங்களில் குடும்பத்தினரை
சந்திக்க அவர்கள் அனுமதிக்கப்படுவர். அதன் பின்னர் 45 நாட்கள் வரை அந்த மருத்துவமனையிலேயே
தங்கி மறுவாழ்வு சிகிச்சைகளைப் பெறுவர்.
விண்வெளி நிலையத்தில் இருந்த சுனிமா வில்லியம்ஸை மீட்கவே இத்தனை
சிரமம் எடுக்கப்பட்டுள்ளது. அதுவும், இன்றைய நவீன விஞ்ஞானம் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ள
காலத்திலேயே சிரமம் என்றால் 1970களில் எப்படி நிலவுக்குப் போய் திரும்பிவந்தார்கள்
என்பது இப்போது மீண்டும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. நியாயமான கேள்விதான்.