News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அண்ணா பல்கலைக்கழக வழக்கில், ‘யார் அந்த சார்?’ என்று அ.தி.மு.க.வினர் கேள்வி எழுப்பிவருகின்றனர். இந்நிலையில், அதற்கு முன்னதாக நடந்த அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தி.மு.க.வினர் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது. ஆனால் திடீர் திருப்பமாக உண்மையான குற்றவாளியைக் காப்பாற்றியது மட்டுமின்றி, புகார் கொடுக்க வந்த பெற்றோரிடம் கட்டப்பஞ்சாயத்து செய்த அ.தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உதவி செய்த பெண் காவல் ஆய்வாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அண்ணாநகரில் வசித்து வரும் 10 வயது சிறுமிக்கு, கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் பாலியல் பலாத்காரம் செய்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் சார்பில் அவரது பெற்றோர் பக்கத்து வீட்டில் வசித்து வரும் சிறுவன் மீது புகார் அளித்தனர். இதையடுத்து, சிறுமியின் பெற்றோரை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வரவழைத்த போலீசார், பகல் மற்றும் இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்ததுடன், அவர்களை மிரட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது.

தங்களின் மகளை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கொடுத்த புகாரை வாங்க மறுத்ததோடு, குற்றச்சாட்டுக்கு உள்ளானவரின் பெயரை நீக்கும்படி போலீசார் வலியுறுத்தி உள்ளனர். இதனால் சிறுமியின் பெற்றோர் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை வீடியோவாக வெளியிட்டனர். இந்த வீடியோவை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அதேபோல் சிறுமியின் தாயார் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்து என அதிரடியாக உத்தரவிட்டனர். பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இணை கமிஷனர் சரோஜ்குமார் தாக்கூர், அண்ணாநகர் துணை கமிஷனர் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நடத்திய விசாரணையில், 10 வயது சிறுமியின் பெற்றோருக்கு காவல் நிலையத்தில் நேர்ந்த கொடுமை பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது சிறுமியை பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டப்பட்ட நபரின் முன்பு வைத்து புகார் கொடுத்த சிறுமியின் அப்பா மற்றும் அம்மா மீது காவல் நிலையத்தில் வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், குற்றவாளிக்கு ஆதரவாக அண்ணாநகரைச் சேர்ந்த 103வது அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர் நேரடியாக மகளிர் காவல்நிலையம் வந்து புகார் கொடுத்த பெற்றோரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.  

உண்மையான குற்றவாளியை காவல்நிலையத்தில் இருந்து அழைத்துச் சென்றதோடு, சிறுமியிடம் நண்பராக பழகிய வேறு ஒரு 14 வயது சிறுவனை போலியாக பலாத்கார வழக்கில் கைது செய்யும்படி இன்ஸ்பெக்டரிடம் கூறியுள்ளார். அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, புகாரில் இருந்து குற்றம்சாட்டப்பட்ட நபரின் பெயரை நீக்க அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜி வலியுறுத்தியுள்ளார். குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஆதரவாக காவல் ஆய்வாளர் ராஜி பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை தாக்கி உள்ளார்.

இந்த தாக்குதலை எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் பார்த்து ரசித்துள்ளார். பாலியல் பலாத்கார குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டதோடு, போலி குற்றவாளியை கைது செய்யவும் வைத்த அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர் மற்றும் பெண் இன்ஸ்பெக்டர் ராஜி ஆகியோரை சிறப்பு புலனாய்வுப் படை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயிடம் அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர் பஞ்சாயத்து பேசியுள்ளார். அதாவது சிறுமியின் குடும்பத்திற்கு பணம் பெற்றுத் தருவதாகவும், ஊரை விட்டே போய்விட வேண்டும் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அதோடு குற்றவாளி சதீஷ் தலைமறைவாக இருக்க அதிமுகவின் சுதாகர் அடைக்கலம் கொடுத்தும் உதவி செய்திருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக வட்டச் செயலாளர் ப.சுதாகர் கைது செய்யப்பட்டது தெரியவந்ததும் அவர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட 103-வது வட்டச் செயலாளர் சுதாகரை பொறுப்பில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, இவர்தான் அந்த சாரா என்று தி.மு.க.வினர் கேட்டு வருகிறார்கள்.

முக்கிய குற்றவாளி சதீஷ் யார் என்று இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. குற்றவாளி யார் என்பது குறித்தும் விரைவில் முழு தகவல் வரவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link