Share via:
மணிப்பூர் முதலமைச்சரின் வீட்டை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் திடீரென்று முற்றுகையிட முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த மோதல் கலவரமாக வெடித்தது. இதன் தொடர்ச்சியாக வன்முறை வெடித்த நிலையில் நிலைமை கட்டுக்குள் வராததால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவையும் துண்டித்து வைக்கப்பட்ட நிலையில் கடந்த 23ம் தேதி (செப்) மீண்டும் வழங்கப்பட்டது.
பழங்குடியின அந்தஸ்து விவகாரம் தொடர்பாக இரு சமூகத்தினருக்கும் இடையில் கலவரம் மூண்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. இதில் பெண்கள் இருவர் நிர்வாணமாக்கப்பட்டு சாலையில் அடித்து இழுத்து செல்லப்பட்டு பாலியல் வன்புனர்வுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி நாட்டையே கொதித்தெழச் செய்தது.
மணிப்பூரில் நடைபெற்ற கலவரத்தில் இதுவரை 120 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமான வழிபாட்டு தலங்களும், வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டது. இருப்பினும் தற்போது வரை மணிப்பூரில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.
இதற்கிடையில் நேற்று (செப்.28) மணிப்பூரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் 19 காவல்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளைத் தவிர்த்து பிற பகுதிகள் அனைத்தும் பதற்றம் நிறைந்த பகுதி என அம்மாநில உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அடுத்த 6 மாதங்களுக்கு இந்த உத்தரவு நீடிக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு மாயமான 20 வயது இளைஞனும், 17 வயது சிறுமியும் கொல்லப்பட்டதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்களின் போராட்டம் வலுவடைந்து வருகிறது.
அதன் எதிரொலியாக இருவர் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு நேற்று மாலை (செப்.28) இம்பாலாவில் உள்ள முதல்வர் பிரேன்சிங்கின் மூதாதையர் இல்லத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயற்சி செய்தனர்.
இருப்பினும் அவர்களை போலீசார் முதல்வர் வீட்டில் இருந்து 200 முதல் 300 மீட்டர் தொலைவில் தடுத்து நிறுத்தினர். எதற்கும் அடங்காத போராட்டக்காரர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வீட்டை முற்றுகையிட முயற்சித்ததால் கண்ணீர் புகை குண்டு வீசி அவர்களை இரவு 9.15 மணியளவில் போலீசார் போராடி கலைத்தனர்.
மணிப்பூர் மாநிலம் பதற்றமான மாநிலம் என்று அறிவிக்கப்பட்ட நிலையிலும் அங்கு போராட்டமும், வன்முறையும் தொடர்வது குறித்து மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.