Share via:

மாணவிகளுக்கு மட்டும் மாதம் 1,000 ரூபாய் கொடுக்கிறீர்கள், எங்களுக்கு
இல்லையா என்று கேட்ட மாணவர்களுக்காகவே தமிழ்ப் புதல்வன் திட்டம் ஆரம்பமாகிறது என்று
கோவையில் திட்டத்தைத் தொடங்கி வைத்து பேசியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
மேலும் அவர் பேசுகையில், ‘’எல்லா மாணவர்களும் உயர்கல்வி படிக்கனும்,
நல்ல வேலைவாய்ப்புகளை பெற வேண்டும், இதுதான் என்னுடைய கனவு மாணவர்கள் கல்வி கற்க எதுவும்
தடையாக இருக்க கூடாது, அதற்கு வேண்டிய உதவிகளை செய்ய நான் இருக்கிறேன், திராவிட மாடல்
அரசு இருக்கிறது’ என்று நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில்
சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை கோவையில்
முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்திருக்கிறார்.
அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க ‘தமிழ்ப்
புதல்வன்’ திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ், 6 முதல் 12-ம்
வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் வங்கிக் கணக்கில்
மாதம் ரூ.1,000 நேரடியாக செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை கோவை அரசு கலைக் கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின் இன்று
காலை தொடங்கி வைக்கிறார். இத்திட்டம் மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்
தமிழ் வழியில் படித்து 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேரும் 3.28 லட்சம்
மாணவர்கள் மாதம் ரூ.1,000 பெறுவார்கள். இதற்காக ரூ.360 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஏழை மக்களின் பொருளாதாரச் சுமையை இந்தத் திட்டம் குறைக்கும் என்பதால்,
தமிழக மாணவர்களுக்கு நல்ல நேரம் தான்.