Share via:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் 2 நாள் ஆலோசனை மாநாட்டில், பொய் செய்திகள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசின் திட்டங்கள் அனைத்தும் கடைகோடி மனிதரையும் சென்றடைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்றும், நாளையும் (அக்.3 மற்றும் அக்.4) கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உடனான 2 நாள் ஆலோசனை மாநாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.
நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற முதல்நாள் மாநாட்டில், அமைச்சர்கள், எஸ்.பி.க்கள், ஐ.எப்.எஸ் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘தமிழ்நாட்டில் எங்கும் அமைதி நிலவ செய்வதே நமது முதல் இலக்கு என்றும் அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் விளைவிக்க நினைப்பவர்களுக்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் உள்நோக்கத்தோடு சிலர் அமைதியை கெடுக்க முயல்கிறார்கள். அதனை தீவிரமாக கண்காணித்து தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் கள்ளச்சாராயம், போதைப் பொருட்களை அறவே ஒழிக்கவும், குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பொய்ச்செய்திகள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் அதே நேரத்தில், அரசின் அனைத்து திட்டங்களும் கடைகோடி மனிதரையும் சென்றடையச் செய்ய வேண்டும் கலெக்டர்கள், எஸ்.பி.க்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
மேலும் போக்குவரத்து, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு சட்ட ரீதியிலான விவாதங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எஸ்.பி.க்கள் மற்றும் ஐ.எப்.எஸ் அதிகாரிகளிடம் முன்வைத்தார்.
நாளை (அக்.4) 2ம் நாள் மாநாட்டில் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் பங்கேற்க உள்ளனர். இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கும் வளர்ச்சிப்பணிகள், வர உள்ள வடகிழக்கு பருவமழையை எவ்வாறு எதிர்கொள்வது? எடுக்கப்பட உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவாதங்கள் முன்வைக்கப்பட உள்ளன.
