Share via:

நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது கல்வீசப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.
நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் டிசம்பர் 5ம் தேதி புஷ்பா2 ரிலீசானது. இத்திரைப்படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்து வருகிறது. திரைப்படம் ரிலீசாவதற்கு முதல் நாள் ஐதராபாத்தில் இயங்கி வரும் சந்தியா திரையரங்கில் படம் ரிலீசானது. இதில் எந்த முன்னறிவிப்பும் இன்றி அல்லு அர்ஜூன் திரைப்படத்தை பார்க்க வந்தார்.
இதை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அவரை பார்க்க முண்டியத்தனர். இதனால் நிலைமையை சரி செய்ய போலீசார் திடீர் தடியடி நடத்தினர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு 35 வயதான ரேவதி என்ற பெயர் உயிரிழந்தார். மேலும் அவரது 9 வயது மகன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்துவிட்டார்.
இதைத்தொடர்ந்து உயிரிழந்த ரேவதியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த அல்லு அர்ஜூன் அவரது குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இருந்தாலும் ரேவதியின் கணவர் அளித்த புகாரின் பேரில் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு ஒருநாள் இரவு சிறையில் இருந்தநிலையில் அடுத்த நாள் அதிகாலை ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள், திடீரென்று அல்லு அர்ஜூன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் மதில் சுவர் மீது ஏறி நின்று அங்கிருந்த பூச்செடிகளை உடைத்தெறிந்து வன்முறையில் ஈடுபட்டனர். உயிரிழந்த ரேவதியின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவரது குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களின் புகைப்படங்கள் வெளியான நிலையில், அவர்கள் தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த்ரெட்டிக்கு நெருக்கமானவர்கள் என்ற தகவல் காட்டுத்தீ போல பரவி வருகிறது. மேலும் ரேவந்த் ரெட்டிதான் திட்டமிட்டு அல்லு அர்ஜூனுக்கு இதுபோன்ற நெருக்கடிகளை தருகிறார் என்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.